
கரூரில் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
திரைத்துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலி கான் செய்தியாளர்களைச் சந்தித்து இந்த சம்பவம் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார்.
கண்ணீர் மல்க இதய அஞ்சலி செலுத்திய பிறகு பேசத் தொடங்கிய நடிகர் மன்சூர் அலி கான், “தூக்கமில்லை. எப்படித் தூங்க முடியும்? சாகும்போது அவர்கள் எவ்வளவு துடித்திருப்பாங்கனு நினைச்சுப் பாருங்க.
இந்தக் கொலையை என்ன அரசியல் ஆக்குவது? உண்மை அது தானே! விஜய் தம்பிக்கு நான் முன்பே வாழ்த்துச் சொல்லியிருந்தேன்.
அவருடைய வளர்ச்சி பிடிக்காமல் இருப்பவங்க அவரை கொள்கை ரீதியாக எதிர்த்து நில்லுங்க, கூட்டம் போட்டு பதில் சொல்லுங்க.

தொடர்ந்து இந்த நாட்டை நாசமாக்கி வருபவர்களை எதிர்த்துப் பேசும்போது கொள்கை ரீதியாக மட்டும் எதிர்த்து நில்லுங்க. ஐ சப்போர்ட் விஜய்! நீங்கள் ஓடிக் கொண்டே இருங்க. மற்ற விஷயங்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்,” என்றவர், “பரப்புரை நிகழ்ந்த இடத்துக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கல.
யார் கையில் போலீஸ் இருக்காங்க? ஒரு கூட்டமோ, மாநாடோ நடத்துறதுக்கு பல விதிமுறைகளை காவல்துறையினர் போடுறாங்க.
வேற எந்தக் கட்சிக்காவது அதை அவங்க போடுறாங்களா? அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு.
காவல் துறையினர் நல்லவர்கள்தான். அவங்க என்ன பண்ணுவாங்க? மேலே இருந்து என்ன உத்தரவு வருதோ, அதைதான் அவங்க செய்ய முடியும்.
புதுசா ஒருத்தர் வரும்போது அவரை நின்று சமாளிக்க வேண்டியதுதானே, ஏன் சொந்த மக்களைக் கொலை செய்கிறீர்கள்? சொந்த மக்களைக் கொன்னுட்டு வேஷம் போட்டுட்டு இருக்கீங்களே!
மக்கள் விஜயைப் பார்க்கணும்னு வந்து நிக்கிறாங்க. ஆனா, இதுக்கு பின்னாடி ஒரு சதி நடந்திருக்கு.
என்னுடைய ரத்தம் கொதிக்குது, தூக்கமில்லாமல் இருக்கேன். விஜய் வராமல் இருந்திருந்தால், வீட்டுக்குள்ள இருந்து அரசியல் செய்கிறார்னு சொல்லியிருப்பீங்க.
அவர் வெளியே வந்தால் மக்களை இப்படிச் செய்கிறீர்கள், இப்போ, எப்படி வெளியே வருவது, யார் பாதுகாப்பில் வருவது? தப்பு செய்தவன் தண்டனையை அனுபவிப்பான்,” என்று முடித்துக் கொண்டார்.