
“இந்த பேரு எங்கள நிம்மதியாவே வாழ விடமாட்டுகுதுங்க… இங்க யாரும் வெளிப்படையா பேசுறதோ பழகுறதோ கிடையாது. யாரு? எந்த ஊரு? எந்த தெரு? எந்த ஆளுங்க? இந்த கேள்வி மட்டும்தான் இங்க எப்பவுமே இருந்துட்டு இருக்கு. தலைமுறை தலைமுறையாக நாங்க வாழுற இடம் ஊருக்கு ஒதுக்குபுறமாத்தானே இருக்கு. இதுலயிருந்தே தெரியலையா எங்கள எல்லோரும் ஒதுக்கி தான் வச்சியிருக்காங்கனு.” என்று தன் ஆதங்கத்தையும் வாழ்வியல் நடத்தையும் பற்றி பேச ஆரம்பித்தார், திருவாரூர் மாவட்டத்தில் அண்ணா காலனியை சார்ந்த பெயர் சொல்ல விரும்பாத அந்த நபர். இவர் பட்டபடிப்பு முடித்து விட்டு வேலையை தேடி கொண்டு இருக்கிறார்.
தொடர்ந்து பேசியவர், “படிச்சா எல்லாம் மாறிடுமுனு சொல்றத்து எல்லாத்துக்கும் இல்லங்க! அது இன்னார் இன்னாருனுத்தா இன்னமும் இருக்கு.
நா இருக்கிறது திருவாரூர்.
ஆனா ஆதார் அட்டையில, அண்ணா காலனி, ஆதிதிராவிடர் தெரு, பெரியார் காலனினு காலனி, காலனி காலனினு போர இடமெல்லாம் பச்சகுத்தி வச்சிக்கிட்ட மாதிரி இருக்கு. எங்க ஊருல தான் எங்களுக்கு மரியாதை இல்லனு, சென்னை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர்னு பக்கத்துல எங்க வேலைக்கு போனாலும் ஆதார்கார்டு கேக்குறாங்க.
அதுல காலனிய பாத்துட்டா முகம் சுழிக்குறாங்க. இதுக்கெல்லாம் ஒரு காலம் வராதானு பாத்தா, நம்ம முதல்வர் இப்போ சமீபகாலத்துல சரியா சொல்லனுமுனா ஏப்ரல் மாசத்துல சட்டமன்ற பொதுகூட்டத்துல இப்படி சொல்லியிருக்காரு, “இந்த மண்ணின் ஆதிகுடிகளை இழிவு படுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகியிருக்கிறது.
ஆதிக்கத்தின் அடையாளமாகவும் மற்றும் தீண்டாமையின் குறியீடாகவும் வசைசொல்லாகவும் மாறியிருப்பதால் இனி காலனி என்ற சொல் தமிழக ஆவணங்களில் இருந்தும் பொதுபுழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்” என்று கூறினார்.
ஆனா கூறியது கூறிய படியே இருக்கு. இங்க எதுவும் மாறல. எல்லாம் அப்படியேதா இருக்கு.” என்றார்.
“இந்த காலனி என்கிற பேரு உங்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டத்தை கொடுக்குது?” என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்,
“இந்த மண்ணின் பூர்வகுடியும் ஆதிகுடியும் நாங்கனு சொல்றாங்க. ஆனா எங்கள ஊரைவிட்டு தள்ளித்தான் வச்சியிருக்காங்க. இங்க இருக்குறவங்கனாளே இப்படித்தானு சொல்றாங்க. குடி, புகை, போதை பயன்பாடு என்று எல்லா தீய பழக்கமும் இங்கதா நடக்குதுனு சொல்றாங்க. எங்கள மனுசனாவே பாக்குறத்து இல்ல.
சின்ன வயசுல எனக்கு நடந்த ஒரு விஷயம்.
ஒரே ஊருதான். கூட படிக்குற பொண்ணு கிட்ட பேசலாமுனு போனேன், அதுக்கு அந்த பொண்ணு, “ எங்க அப்பா உங்ககூடலாம் பேச கூடாதுனு சொல்லியிருக்காருனு” சொல்லிடுச்சி. ஒரு பள்ளிக்கூடத்துல சகஜமா படிக்குற வயசுல யாராச்சும் இந்தமாதிரி, இவுங்ககிட்டலாம் யாரும் பேச கூடாதுனு சொல்லி உங்கள ஒதுக்குனா உங்களுக்கு எப்படி இருக்கும்? அது அப்ப ஏனு எனக்கு தெரியவும் இல்ல! புரியவும் இல்ல.
ஆனா, இப்ப இதபத்தி நீங்க கேட்டதால சொன்னேன். இன்னமும் எவ்வளவோ இருக்கு. அதெல்லாம் நாங்க எந்த ஊரு என்பதில் இல்ல! எந்த தெரு என்பதில் தான இருக்கு.”
“நீங்க வெளியூருக்கு வேலைக்கு போனப்ப இப்படி ஏதாச்சும் நடந்திருக்கா?”
“அதெல்லாம் நிறைய இருக்குப்பா. உன் முகத்த பாத்தே நீ யாருன்னு சொல்ற அளவுக்கு இருக்கு. கீழதெருவா? மேலதெருவா? என்ற பேச்சும், ஊருக்கு உள்ளேயா? வெளியேயா? என்ற பேச்சும் பழகிடுச்சி. இப்பல்லாம், இந்த ஆதார் கார்டு, ரேசன் கார்டு, ஓட்டர் ஐடினு எல்லாத்திலையும் காலனி தெரு, ஆதிதிராவிடர் தெரு, பெரியார் தெரு, அண்ணா காலனினு பெருக்கு பக்கத்துல இருக்குறத்த பாத்தே சில சமயம் திறமையும் தகுதியும் இருந்து, வேலை இல்லனு வெளிய வந்த கதையும் நிறைய இருக்கு.
இது எங்க ஊரு. இங்க என்ன பத்தி எல்லோர்க்கும் தெரியும். வெளியூருக்கு போனா நா யாரு? என்னனு யாருக்கு தெரியும்? ஆனா, இந்த அடையாளத்தை நானே தூக்கி தலையில வச்சி சுமக்குற மாதிரி இருக்கு. ஊரு பேருதா அது! ஆனா வெளிய மதிப்பு இல்லையே!”
“இந்த பேர் மாறினால் மட்டும் என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?”
“ஒன்றும் நடக்காது. என் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வாழும் காலத்திலாவது அவர்கள், இந்த காலனி என்ற சாதிய ஆதிக்கத்தில் இருந்து கொஞ்சம் விடுபட்டு இருப்பார்கள் என்ற நம்பிக்கைதான்.
என் மூக்கு அம்மாவை போல, என் சாயல் அப்பாவை போன்றது. இப்படித்தானே எல்லோரும் இருக்கிறார்கள். அவரவர் பெற்றோர்களை போல.
அதெப்படி எங்களை மட்டும், ‘ அதான் பார்த்தாலே தெரியுதே’ என்று சொல்கீறார்கள்? அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
ஊர் பெயர், தெரு பெயர், முகவரி மட்டும் முதல்வர் சொன்னது போல் சரியாக எங்களுக்கு அமைந்தால், எத்தனையோ வெளியூர்களில் எத்தனையோ வேலைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை தான் எல்லாம்.
இதுக்கு முன்னாடி பொதுவா எங்கள பறையர் அப்படினு சொல்லுவாங்க! ஆனா, சரியா 1914 ஆம் ஆண்டு அந்த சொல்ல நீக்கிட்டு எங்களுக்கு ஆதிதிராவிடர் என்ற சொல் கிடைச்சிது. இப்பவும் பறையர் அப்படின்ற சொல் புழக்கத்தில் இருக்கு. ஆனா அதிகமா இல்ல!
ஆனா இப்ப கிட்டத்தட்ட நூறு வருசத்துக்கு அப்புறம் இந்த பேருலாம் மாத்துறமுனு முதல்வர் சொன்னது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாதா இருக்கு. ஆனா இன்னும் அது நடைமுறைக்கு வராதது ஏமாற்றத்த அளிக்குது.
எல்லாமும் எல்லோருக்கும் சமம் என்பது சமூகத்தை சார்ந்து தான் அமைகிறதா என்ன? அப்படி இல்லை என்றால், எங்களுக்கும் சமமான மரியாதையை கொடுங்கள். நாங்களும் இங்குதான் உங்களுடன் வாழ்கிறோம். ஆனால் எங்கள் வாழ்வு மட்டும் தீட்டு என்று சொல்வது எவ்வளவு அநியாயமான வார்த்தை.
எல்லோரும் சமம் என்று நடத்துங்கள். ஊருக்கு ஊர் ஆதிதிராவிடர் தெரு, காலனி போன்ற குறியீடு சொற்கள் எளிதாகவே மக்களை தரம் பிரிக்கின்றன.
அது ஒன்றும் தராசு இல்லையே.
இவர்கள் இன்னார், இவர்கள் இன்னார் என்று எங்களிடம் மட்டும் இல்லை. அது ஒட்டுமொத்த சமூகத்திலும் பரவி கிடக்கிறது. ஒரு பெயர் பலகை அதை மாற்றும் என்று நம்புகிறேன். இல்லையேல் இதோ இந்த விகடனின் செய்தி சிலர் காதுகளுக்கு செல்லும், யாராவது ஒருவர் அதை மாற்றுவார் என்று நம்புகிறேன். அதுவும் இல்லையேல் இந்த விகடன் எங்களை பற்றியும் எங்கள் பிரச்னைகள் பற்றியும் ஒரு முறை பேசியிருக்கிறது என்ற சந்தோஷமே எனக்கு போதும் தான்” என முடித்துக் கொண்டார்.