
தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.
அதில் மிகவும் முக்கியமானது ஆம்புலன்ஸை வழிமறித்து தவெக தொண்டர்கள் டிரைவர்களைத் தாக்கியதாக எழுந்தக் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஈஸ்வர மூர்த்தி அளித்தப் புகாரின் எஃப்.ஐ.ஆர் வெளியாகியிருக்கிறது.
அதில், “ நான் கரூர் அமராவதி மருத்துவமனை வெளியே உள்ள சாய் ஆம்புலன்ஸில் டிரைவராக வேலை வருகிறேன். 27.09.2025-ம் தேதி இரவு 07.15 மணிக்கு, அமராவதி மருத்துவமனையில் இருந்த ஒரு காவலர் வந்து `வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க கட்சியினர் நடத்திய பிரச்சாரத்தால் கூட்ட நெரிசலில் அதிகமாகி மயக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறும் சொன்னார்.
நான் ஆம்புலன்ஸ் வாகனத்தை எடுத்துக் கொண்டு, வேலுச்சாமிபுரம் சென்றேன். அங்கு மயங்கி கிடந்த ஒரு பெண் இரண்டு ஆண்களை ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.
அங்கிருந்த மருத்துவர் இரண்டு ஆண்களையும் பரிசோதித்துவிட்டு, அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னதன் பேரில், கரூர் மெடிக்கல் காலேஜிற்கு சென்று இறந்தவர்களை மருத்துவரிடம் ஒப்படைத்தேன்.
தொடர்ந்து நான் மறுபடியும் ஆம்புலன்ஸில் வேலுச்சாமிபுரம் மருத்துவமனை அருகில் 08.15 மணி சுமாருக்கு வந்த போது TN 54AB 5335 என்ற எண் கொண்ட ALCAZAR கலர் காரில் வந்த நபர்கள், என் ஆம்புலன்ஸை வழிமறித்து, கெட்ட வார்த்தையால் திட்டி, கைகளால் தாக்கினார்கள்.
‘நான் அவசரமாகச் செல்ல வேண்டும். உயிரை காப்பாற்ற வந்தேன்’ என்று சொல்லிக் கொண்டே ஆம்புலன்ஸை எடுத்த போது, அனைவரும் ஆம்புலன்ஸை எடுக்க விடாமல் அங்கு கிடந்த கல்லால் ஆம்புலன்ஸின் சைடு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியும், சைரன் லைட்டை சேதப்படுத்தினார்கள்.
‘இனிமேல் உன் வண்டி இங்கே வத்தால், நாங்கள் அனைவரும் சேர்ந்து உன்னை கொல்லாமல் விடமாட்டோம்’ என்று மிரட்டினார்கள்.
நான் உயிருக்கு பயந்து கொண்டு வண்டியை திரும்ப மருத்துவமனையில் நிறுத்திவிட்டு, என் ஓனருக்கு தகவல் கூறினேன். என் மீது கொலை மிரட்டல் விடுத்தவர்கள், கடமையைச் செய்யமுடியாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் புகாரின் பேரில் கரூர் நகர காவல் நிலையம், 856/2025 U/S 191(2), 29(b) 115(2) 324(3), 351(3), BNS ன்படி வழக்கு பதிவு செய்திருக்கிறது.