
”விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த வலியுறுத்தி குண்டாறு நதியை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். மேலும் குண்டாறு செல்லும் வரத்து கால்வாய் ஓடையில் இறங்கி அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அளித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தால் 80 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். ஆனால் தி.மு.க அரசுக்கு இதைப் பற்றி கவலை இல்லை. கடந்த 2008 ம் ஆண்டு அன்றைய நிதியமைச்சராக இருந்த அன்பழகன் இந்த திட்டத்தை அறிவித்தார். 50 ஆண்டுகால கோரிக்கை இந்த திட்டம் ஆனால் இதற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. அ.தி.மு.க 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது ஆட்சி முடிவடையும் நேரத்தில் ரூ.14 ஆயிரத்து 500 கோடி என அறிவித்து அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மட்டும் நடத்தியது.
அதனை தொடர்ந்து தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ரூ.364 கோடி ஒதுக்கப்பட்டது. கரூரிலிருந்து குண்டாறு வரை 265 கிலோமீட்டர் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் வெறும் 8 கிலோமீட்டர் தான் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் சென்றால் இன்னும் 255 ஆண்டுகள் ஆகும் என நிபுணர்கள் சொல்கிறார்கள். இது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசின் தொகுதி அந்த தொகுதி மக்கள் பயன்பெறும் திட்டத்தையே அவர் கண்டுகொள்ளவில்லை” என்றார். கரூர் விஜய் பொதுக்கூட்டத்தில் உயிரிழப்புகள் குறித்து விசாரணை கமிஷன் நடைபெறுவது குறித்து உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “உண்மை நிலவரம் வெளியே வர வேண்டும் பல வதந்திகள் பரவுகிறது. உண்மை வெளியே வர வேண்டுமென்றால் நீதிமன்றம் ஒரு குழுவையோ, ஒரு கமிஷனையோ அமைத்தோ அல்லது சிபிஐ விசாரணை செய்தால் மட்டுமே உண்மை நிலவரம் வெளியே வரும். இது சூழ்ச்சியா இல்லை விபத்தா என மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்தனர். அங்கு முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை. தற்போது கரூருக்கு முதலமைச்சர் தனி விமானத்தில் வருகிறார். பிரேத பரிசோதனை காலையில் தான் செய்வார்கள். ஆனால் முதலமைச்சர் வருவதற்கு முன்னதாக அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

இதில் இன்னொரு அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் விருது வழங்க வேண்டுமென ஆஸ்கர் நிறுவனத்தை நான் கேட்டு கொள்கிறேன். ஒரு துயர சம்பவத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்
. இதை மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். கடந்த கூட்டத்தில் எவ்வளவு மக்கள் வந்தார்கள் இந்த கூட்டத்தில் எவ்வளவு மக்கள் வருவார்கள் என உளவுத்துறைக்கு தெரியும். பெரிய இடத்தை காவல்துறை கொடுத்திருக்கலாம். அதே நேரத்தில் விஜய் தாமதமாக வந்ததும் ஒரு காரணம்தான். 11.30 என அறிவித்துவிட்டு மாலை 6.30க்கு வருகிறார். அரசியல் கட்சி தலைவர்களுக்கு கடமை உள்ளது. 11 மணி என்றால் குறைந்தபட்சம் ஒரு நான்கு மணிக்குள்ளாவது வந்திருக்க வேண்டும். வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். நாங்களும் மாநாடு நடத்தியிருக்கிறோம். மாமல்லபுரத்தில் சுமார் 10 லட்சம் பேர் கூடினார்கள், ஆனால் எந்த பிரச்னையும் இல்லை.

பொதுமக்களும் ஒரு காரணம் தான் குழந்தைகளை இதுபோன்ற இடத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது. எல்லோருக்கும் கடமை உள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது. நீதியரசர் அருணா ஜெகதீசன் நேர்மையானவர்தான். அவர் ஒரு பக்கம் விசாரணை நடத்தட்டும். ஆனால் அரசாங்கம் எல்லா உண்மைகளையும் அவரிடம் சொல்வார்களா என தெரியவில்லை. ஏன் மின்தடை ஏற்பட்டது. யார் பாட்டில் வீசினார்கள். அனைத்தும் இது வதந்தி தான் முதலில் இந்த இடத்தை யார் தேர்வு செய்தார்கள்… அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என பேசினார். இலங்கை கடற்படையால் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நிச்சயமாக இது ஒரு தவறான போக்கு அவர்கள் மட்டுமல்லாமல் இலங்கை கடற்கொள்ளையர்களையும் ஏவி விட்டு சண்டை போட வைக்கிறார்கள். நமது முதலமைச்சர் கடிதம் மட்டுமே எழுதுகிறார். அதற்காக ஒரு கடிதத்தை தயாராக வைத்திருப்பார் தேதியை மட்டும் மாற்றி மாற்றி அந்த கடிதத்தை அனுப்பி விடுவார். தி.மு.க மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள். போராட்டம் செய்ய வேண்டியது தானே நாங்களும் அழுத்தம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என பேசினார்.