
ஆசிய கோப்பை தொடரின் 41 வருட வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 28) இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் ஓப்பனர்கள் ஃபர்கான் (57), ஃபக்கர் ஜமாம் (46) நல்ல அடித்தளம் கொடுத்ததும் 146 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்.
இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்தியா அணியில் 20 ரன்களுக்குள் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் காலி.
இந்த இக்கட்டான சூழலில் கைகோர்த்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன் கூட்டணி பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்கள் அடித்து நங்கூரமிட்டனர்.
ஒரு கட்டத்தில் சாம்சனும் அவுட்டானதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே பாகிஸ்தான் பவுலர்களுக்கு கொஞ்சம் அதிரடி காட்டி, திலக் வர்மா மீதிருந்த அழுத்தத்தை திசைதிருப்பினார்.
அதற்கேற்றாற்போல திலக் வர்மா நிதானமாக அரைசதம் அடித்தார்.
பின்னர், கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரின் கடைசி பந்தில் 33 ரன்களில் ஷிவம் துபே அவுட்டாக, கடைசி 6 பந்துகளில் 10 எடுத்தால் சாம்பியன் எனும் நிலைக்கு வந்தது இந்தியா.
ஹாரிஸ் ராஃப் வீசிய 2-வது பந்தில் திலக் வர்மா சிக்ஸ் அடித்து இந்தியா 9-வது முறையாக ஆசிய கோப்பை வெல்வதை உறுதிசெய்துவிட்டார்.
69 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இந்தியாவை வெற்றி பெறவைத்த திலக் வர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது விருது வழங்கப்பட்டது.
இத்தொடரில் 314 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
Abhishek Sharma player of the tournament .#AsiaCupFinal #INDvsPAK pic.twitter.com/PerklHEQ44
— Surbhi (@SurrbhiM) September 28, 2025
விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய அபிஷேக் சர்மா, “கார் வாங்குவது எப்போதும் மகிழ்ச்சிதான் (தொடர் நாயகனுக்கு வழங்கப்படும்).
உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்த அணியில் சேருவது எந்த தொடக்க வீரருக்கும் எளிதானது அல்ல.
எங்களுடைய ஆட்டத்தை ஆடவும், எங்களின் இன்டென்ட்டை வெளிப்படுத்தவும் எங்களிடம் திட்டம் இருந்தது. அதற்காக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம்.
நீங்கள் இப்படி விளையாடுவதற்கு, பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் ஸ்பெஷல் சப்போர்ட் உங்களுக்குத் தேவை, அதைத்தான் நான் பெற்று வருகிறேன்.
பவர்பிளேயை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற திட்டம் எனக்கு இருந்தது.
ஸ்பின்னர், வேகப்பந்துவீச்சாளர் மற்றும் பிரீமியம் வேகப்பந்துவீச்சாளர் யாராக இருந்தாலும் முதல் பந்திலேயே அடிக்க நினைப்பேன்.
அது உதவுவதோடு என் அணிக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுதான் நடந்தது.” என்றார்.