• September 29, 2025
  • NewsEditor
  • 0

ஆசிய கோப்பை தொடரின் 41 வருட வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 28) இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். மீண்டும் இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கிக்கொள்ளவில்லை.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் ஓப்பனர்கள் ஃபர்கான் (57), ஃபக்கர் ஜமாம் (46) நல்ல அடித்தளம் கொடுத்ததும் 146 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான். மொத்தமாக 7 பேர் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர்.

குல்தீப் யாதவ்

இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்தியா அணியில் 20 ரன்களுக்குள் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் காலி.

இந்த இக்கட்டான சூழலில் கைகோர்த்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன் கூட்டணி பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்கள் அடித்து நங்கூரமிட்டனர்.

ஒரு கட்டத்தில் சாம்சனும் அவுட்டாக, அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்த திலக் வர்மா மீதான அழுத்தத்தை, அடுத்து களமிறங்கிய ஷிவம் தனது அதிரடியால் குறைத்தார்.

திலக் வர்மா அரைசதம் கடக்க, கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரின் கடைசி பந்தில் 33 ரன்களில் ஷிவம் துபே அவுட்டாக, கடைசி 6 பந்துகளில் 10 எடுத்தால் சாம்பியன் எனும் நிலைக்கு வந்தது இந்தியா.

திலக் வர்மா
திலக் வர்மா

ஹாரிஸ் ராஃப் வீசிய முதல் பந்தில் இரண்டு ரன்கள் ஓடிய திலக் வர்மா அடுத்த பந்திலேயே சிக்ஸ் அடித்து இந்தியா 9-வது முறையாக ஆசிய கோப்பை வெல்வதை உறுதிசெய்துவிட்டார்.

அடுத்த பந்தில் திலக் வர்மா சிங்கிள் எடுக்க, ரின்கு சிங் ஃபோர் அடித்து ஆட்டத்தை முடித்தார்.

இந்தியாவின் டாப் ஆர்டர் சொற்ப ரன்களில் காலியான பிறகு நிதானமாக ஆடி 69 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இந்தியாவை வெற்றி பெறவைத்த திலக் வர்மா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இவ்வாறிருக்க இந்தியா வென்றதும், ஆபரேஷன் சிந்தூரை தொடர்புபடுத்தி மூன்று வரியில் பிரதமர் மோடி ட்வீட் செய்திருக்கிறார்.

மோடி தனது எக்ஸ் தளப் பக்க பதிவில், “விளையாட்டுக் களத்திலும் ஆபரேஷன் சிந்தூர்.

முடிவு ஒன்றுதான், இந்தியா வென்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *