
கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 க்கும் மேற்பட்ட உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த விசாரணை ஆணையத்தின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் தனது விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும் அருணா ஜெகதீசன் தலைமையில்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையையும் சில ஆண்டுகளுக்கு முன் அருணா ஜெகதீசன் தமிழக அரசிடம் சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மாலை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விஜய் பரப்புரை நடத்திய வேலுசாமிபுரத்தில் அரை மணி நேரமாக ஆய்வு செய்தார்.
பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்த்ததோடு மட்டுமல்லாமல், காவல்துறையினரிடமும் சில விஷயங்களைக் கேட்டறிந்துகொண்டார்.
அவரின் ஆய்வு முடிந்த பிறகு, தடயவியல் துறையினர் சம்பவம் நடந்த இடத்தை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து ரிப்போர்ட் எடுத்து வருகின்றனர்.

த.வெ.க தொண்டர்கள் ஏறி உடைத்த மேற்கூரைகள், மரங்கள், இருச்சக்கர வாகனங்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் சிதறிக்கிடக்கும் செருப்புகள் என போலீசார் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கும் அத்தனை பகுதியையும் சோதித்து ரிப்போர்ட் எழுதிக் கொண்டனர்.
காவல்துறை பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்திருக்கும் அந்த இடத்தை இன்றும் எக்கச்சக்கமான மக்கள் நேரில் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.