
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்த நிலையில், காலையிலிருந்து அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த இழப்பு மிகவும் துயரமாக இருக்கிறது. தேர்தல் காலத்தில் கூட்டங்கள் நடத்துவது இயல்பானது.
ஆனால், 5000 பேர்கூட நிற்க முடியாத இடத்தில் மாநில காவல்துறை அனுமதி கொடுத்திருக்கிறது. அதே நேரம் கூட்டத்துக்கான முறையான ஏற்பாடுகளையும் செய்யவில்லை. இதை நினைக்கும்போது கோபமாக வருகிறது.
ஏன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார்கள் எனத் தெரியவில்லை. விஜய் அரசியலுக்கு புதியவர். கட்சியிலும் பெரியளவில் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை. இதை மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
மக்களைக் கூட்டுவது மட்டுமல்ல, கூடிய மக்களை பத்திரமாக திரும்ப அனுப்புவது என்பதும் அனுபவம் சார்ந்தது. இன்னும் விஜயைப் பார்க்க வந்த கூட்டம் இப்படி ஆபத்தில் சிக்கியிருக்கிறது.
உயிர்பலிகள் ஏற்பட்டிருக்கிறது. ஒரு தலைவன் அந்த இடத்தைவிட்டுச் செல்வானா? அவரைப் பார்க்க வேண்டும் என குழந்தைகளை அழைத்து வந்திருக்கிறார்கள்.
அதையெல்லாம் இழந்து நிற்கிறார்கள் என்றால், அவரால் எப்படி அவர் வீட்டுகுச் செல்ல முடிந்தது. சினிமா ஷூட்டிங்க் மாதிரி கட்சிக் கூட்டத்தை நடத்தமுடியாது. அரசியல் என்பது வேறு. அது மக்களுக்கானது. மக்களுடன் நிற்க வேண்டியது” எனத் தெரிவித்திருகிறார்.