• September 28, 2025
  • NewsEditor
  • 0

திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – சுரேஷ் கோபி

கேரள மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமான விவாதம் தற்போது எழுந்துள்ளது. எந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க தலைவர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.

தொடக்கத்தில் ஆலப்புழாவில் அல்லது திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியிருந்தார்.

அதன் பின்னர் பாஜக தலைவர்களிடையே எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமான இடம் குறித்த விவாதம் எழுந்தது.

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

கோழிக்கோட்டில் அமைக்க வேண்டும் என்று சிலரும், திருவனந்தபுரத்தில் அமைக்க வேண்டும் என்றும், கொச்சியில் அமைக்க வேண்டும் என்றும் தலைவர்களிடையே பல்வேறு கருத்துகள் எழுந்தன.

இன்று இது குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது அவர் எந்தப் பதிலும் கூறாமல் சென்றுவிட்டார். இந்த நிலையில் எய்ம்ஸ் விவகாரத்தில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

இது பற்றி வீணா ஜார்ஜ் கூறுகையில்,

“கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்பது மாநிலம் முழுவதும் உள்ள மக்களின் கோரிக்கையாகும்.

பிற மாநிலங்களில் இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் வழங்கும்போது, கேரளாவுக்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் உரிமைகூட இல்லையா? எனவே கினாலூரில் எய்ம்ஸ் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம்.

கேரளாவில் எய்ம்ஸ் அமைப்பது சம்பந்தமாக எழுந்துள்ள விவாதங்கள் காரணமாக எய்ம்ஸ் வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையைப் புறந்தள்ளிவிடக்கூடாது.

வீணா ஜார்ஜ்
வீணா ஜார்ஜ்

கேரளாவிற்கு எய்ம்ஸ் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த ஒரு அரசியல் முடிவுதான் எடுக்க வேண்டியுள்ளது என நான் கருதுகிறேன்.

எய்ம்ஸ்-க்கு ஆதரவான நிலைப்பாட்டை எவ்வளவு சீக்கிரம் எடுக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் மத்திய அரசு எடுக்க வேண்டும்.

பல ஆண்டுகளாக எய்ம்ஸ் வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை விரைவில் எடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை வைக்கிறோம்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *