
சென்னை: 'உயர் நீதிமன்றம் உடனடியாக கரூர் சம்பவத்தில் தலையிட்டு வழக்குப் பதிந்து, சுயாதீனமான விசாரணையை மேற்கொண்டு, தவெக தலைவர் விஜய் மீதும், பிரச்சாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியான ரோடு ஷோ பிரச்சாரங்களைத் தடை செய்ய வேண்டும்' என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடைபெற்ற, நடிகர் விஜய்யின் பரப்புரை நிகழ்ச்சி, ஒரு பேரதிர்ச்சியையும் பேராபத்தையும் உருவாக்கியுள்ளது. கூட்ட நெரிசலால் குழந்தைகளும் சிறுவர்களும் உட்பட 39 பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்ததும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள் என்ற செய்திகளும், நம் அனைவரின் உள்ளத்தையும் உருக்குகின்றன.