• September 28, 2025
  • NewsEditor
  • 0

கரூரில் விஜய்யின் பரப்புரைக்காக கூடிய கூட்டத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இதில் ஒரு ஒன்றரை வயது குழந்தையும் அடக்கம். விஜய் பரப்புரை செய்த இடத்திலிருந்து இரண்டு தெரு தள்ளி அந்த ஒன்றரை வயது குழந்தையான துரு விக்னேஷின் வீடு இருக்கிறது.

சோகத்தில் ஆழ்ந்திருந்த துரு விக்னேஷின் வீட்டிற்குச் சென்றோம். இரண்டு 10 க்கு 10 அறைகள் கொண்ட அந்த சிறிய வீட்டில் கண்ணாடி பேழைக்குள் அந்த பிஞ்சுக் குழந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

விஜய் பிரசாரம் கரூர்

துருவ்வின் அம்மா வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கண்ணாடி பேழையின் மீது சாய்ந்து படுத்தபடி கண்களில் நீர் வற்ற அழுதுகொண்டிருந்தார்.

அம்மாவுக்கு முத்தம் கொடுப்பா… என சைகை காட்டியபடி அவர் சிந்திய கண்ணீர் யாரையும் ஒரு நொடி உலுக்கிவிடும். துருவ்வின் தந்தை RO மெஷின் சர்வீஸ் செய்யும் வேலை செய்கிறார்.

வீட்டின் ஒரு மூலையில் உட்காந்து தலையில் அடித்தபடி ‘உன்ன விட்டுட்டேனப்பா…’ ஆற்றாமையில் பொறுமிக் கொண்டிருந்தார். மனதை கணக்கச் செய்கிற அந்தக் காட்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.

துரு விக்னேஷின் தாத்தாவான வெங்கடேஷனிடம் பேசினோம். ‘நான் துப்புரவுப் பணிதான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். பையன் 10 வது வரைக்கும் படிச்சிட்டு RO மெஷின் சர்வீஸ் பண்ண போயிக்கிட்டு இருக்கான்.

என் மருமவளுக்கு சரியா வாய் பேச முடியாது. ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் கழிச்சுதான் குழந்தை பிறந்துச்சு. அடுத்த மாசம் வந்தா அவனுக்கு ரெண்டு வயசு ஆகிடும்.

குழந்தை உயிரிழப்பு
குழந்தை உயிரிழப்பு

அம்மா, அப்பா, தாத்தா… எதாச்சு வேணும்னா அவா… அவான்னு பேச ஆரம்பிச்சிட்டான். விஜய் வராரேன்னு என் பொண்ணுதான் துருவ தூக்கிட்டு போயிருக்கா. அங்க கூட்டத்துல என் பொண்ணு மயக்கமாகுற நிலைமைக்கு போயிருக்கா.

அப்ப பக்கத்துல இருந்த இன்னொரு அம்மா குழந்தையை வாங்கிருக்காங்க. அவங்களும் கூட்டத்துல திணறி குழந்தையை கீழ விட்டுட்டாங்க. கூட்டத்துல நசுங்கி துரு இறந்துருக்கான்.

மவனும் மருமவளும் நிலைகுலைஞ்சு நிக்காங்க. குடும்பமே உடைஞ்சு போய் உட்காந்து இருக்கோம். விஜய் கட்சியில் இருந்து யாரும் வந்து எட்டி கூட பாக்கல.. ‘ என்றார் வேதனையுடன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *