
கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் கிட்டதட்ட 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்ட பலர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரல் பார்ப்போரைக் கலங்கடிக்கச் செய்திருக்கிறது.
இந்நிலையில் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட தம்பதி விகடனுக்கு பேட்டி அளிக்கையில், ” நேற்று மதியம் 2:45 மணிக்கு எங்கள் குழந்தைகளோடு விஜயைப் பார்ப்பதற்காக வந்தோம். அப்போதே கூட்டம் கடுமையாக இருந்தது.
இங்கிருந்து 2 கி.மீக்கு முன்பாக இருக்கும் முனியப்பசாமி கோயில் அருகே விஜய் 5:30 மணிக்கே வந்துவிட்டார்.
ஆனால், அங்கிருந்து அவர் ஸ்பாட்டுக்கு வந்து சேர ஒன்றரை மணி நேரம் ஆனது.
அந்த சமயத்தில்தான் தள்ளுமுள்ளு அதிகமானது. நீண்ட நேரம் நின்றதால் தண்ணீர் தாகத்தில் நிறைய பேர் மயக்கமடைந்தனர்.
அருகிலுள்ள கடைக்காரர்களும் விஜய் மன்றத்து ஆட்களும் முடிந்தளவுக்கு தண்ணீர் பாட்டில்களைக் கொடுத்தனர். ஆனால், கூடிய கூட்டத்துக்கு அதெல்லாம் போதவில்லை.
விஜய் பேச ஆரம்பிக்கும்போதே நிறைய பேர் சுருண்டு விழுந்துவிட்டனர். குழந்தைகளை அழைத்து வந்தவர்கள்தான் ரொம்பவே சிரமப்பட்டார்கள்.

டூவிலர்களை கவிழ்த்து போட்டு அதன் மீது ஏறி குழந்தைகளை கடைகளின் மேற்கூரைகள் மீது உட்கார வைத்தோம். அதனால் மட்டும்தான் எங்களின் குழந்தைகளைக் காப்பாற்ற முடிந்தது.
பல பேர் கூட்டத்தில் நசுங்கி இறந்ததைக் கண்ணால் பார்த்தோம். எங்கள் வீட்டருகே ஒரு இரண்டரை வயது குழந்தை கூட்டத்தில் சிக்கி இறந்திருக்கிறது அதிலிருந்தெல்லாம் எங்களால் மீண்டு வர முடியவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.