
நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு, சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சூரி தன் எக்ஸ் பக்கத்தில், “கரூரில் நிகழ்ந்த இந்த மனதை உறையவைக்கும் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் நிம்மதியும் அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் இறைவன் கருணையால் விரைவில் முழு நலம் பெற வேண்டுகிறோம்.
இந்த வேதனை நிறைந்த தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்து, மனதாலும் செயலாலும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். எனது ஆழ்ந்த இரங்கல்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நடிகர் வடிவேலு, “கரூரில் நடந்த துயரச் சம்பவத்தை கேட்டதிலிருந்து நெஞ்சை உலுக்குகிறது. இறந்துபோன இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் பிஞ்சுக் குழ்ந்தைகளை நினைத்து கண்ணீர் சொட்டுகிறது. இனி ஒரு உயிர்கூட போகக் கூடாது என தெய்வங்களை வேண்டிக்கொள்கிறேன். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று உதவும் முதல்வரைப் பார்த்து மக்களைப் போல நானும் ஆறுதல் அடைகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.