
நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களை சந்திக்க இன்று அதிகாலையிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் சென்றுவிட்டார்.
அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்டாலின் பேசியதாவது:
“ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழப்பு என்பது இதுவரை நடக்காதது, இனியும் நடக்கக்கூடாதது.
இழப்பீடு, விசாரணை
இந்தத் துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அது முதலமைச்சர் பொது நிதியிலிருந்து வழங்கப்படும்.
காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.
இன்று காலை 9.30 மணிக்கு நான் வரலாம் என்று டிக்கெட் பதிவு செய்திருந்தேன். ஆனால், இந்தக் கொடூரமான காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது மனசு கேட்கவில்லை. அதனால் தான், முன்கூட்டியே 1 மணியளவில் விமானம் பிடித்து வந்துவிட்டேன்.

விஜய் கைது செய்யப்படுவாரா?
ஆணையத்தின் அறிக்கையின்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யார் கைது செய்யப்படுவார். செய்யப்பட மாட்டார்கள் என்று நீங்கள் கேட்கும் எந்த எண்ணத்திற்கும் நான் ஒத்துழைக்கத் தயாராக இல்லை” என்று கூறியுள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் வாசலில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.