
திண்டுக்கல்: கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், விளம்பரத்துக்காக விழா நடத்தி மக்களின் வரிப்பணத்தை திமுக அரசு வீணாக்குவதாக பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
‘உரிமை மீட்க; தலைமுறை காக்க’ என்ற பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி நேற்று திண்டுக்கல்லில் பொதுமக்கள் மற்றும் பங்குத் தந்தையர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் மாநில அரசு நடத்தும் சாதி வாரி கணக்கெடுப்புக்கு தடை கிடையாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநில அரசுக்கும் முழு அதிகாரம் இருக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகும், தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று முதல்வர் சொல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அவருக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவர்.