
புதுடெல்லி: நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசும்போது, “ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்தியாவின் 7 போர் விமானங்களை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம்” என்று கூறினார்.
இந்நிலையில், ஐ.நா. சபையில் இந்தியா சார்பில் நேற்று உரையாற்றும் சுற்று வந்தது. அப்போது ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதியான முதன்மை செயலர் பீட்டல் கெலாட், ஷெபாஸ் ஷெரீப்புக்கு சரியான பதிலடி கொடுத்தார். சபையில் பீட்டல் பேசியதாவது: தீவிரவாத அமைப்புகளை பாதுகாக்கும் கேடயம் போல் இருக்கும் பாகிஸ்தான், தோல்வியை கூட வெற்றியாக சித்தரிக்க முயற்சிக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, பாகிஸ்தானின் விமான தளங்கள் சேதப்படுத்தப்பட்டன. விமான தளத்தின் முக்கிய கட்டிடங்கள் நொறுங்கி எரிந்தன. அப்போது போரை நிறுத்த இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. விமான படை ஓடு பாதை சேதம் அடைந்ததும், கட்டிடங்கள் தீயில் எரிந்ததும் வெற்றி என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருதினால், அவர் சந்தோஷப்படுவதை வரவேற்கிறோம். இவ்வாறு பீட்டல் கெலாட் பேசினார்.