• September 28, 2025
  • NewsEditor
  • 0

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 12 பேர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களைக் காண தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்.

தவெக விஜய் சுற்றுப்பயணம்

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தன் எக்ஸ் பக்கத்தில்,

“தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலால் ஆழ்ந்த வருத்தம்.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்த அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்.

இந்த துயரமான நேரத்தில் கேரளா தமிழக மக்களுடன் நிற்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில்,

“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பரப்புரைப் பயணத்தில் இன்று கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது.

கடும் நெரிசலில் சிக்கி மிதிபட்டு மூச்சுத் திணறி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது ஆற்றவொண்ணாப் பெருந்துயரமாகும்.

மேலும், பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் கவலையளிக்கிறது. 

திருமாவளவன்

அவர்கள் அனைவரையும் காப்பாற்றும் வகையில் உயர் சிகிச்சை அளித்திட தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளைப் போர்க்காலச் சூழலின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன், உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த வருத்தங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.பத்து இலட்சம் இழப்பீடாக வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவிப்புச் செய்துள்ளது.

எனினும், அத்தொகையைக் குறைந்தது தலா ஐம்பது இலட்சம் என வழங்கிட முன்வரவேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

காயமடைந்தோர் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *