
இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.
அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி, இந்த நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல பேர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களைக் காண தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுபடி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், “கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பாஜக-வின் மூத்த தலைவர்களை மருத்துவமனைக்கு விரைந்து, பாதிக்கப்பட்டோருக்கு உரிய உதவிகள் செய்திட கேட்டுக்கொண்டுள்ளேன். கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மாவட்ட தலைவரையும் உடனடியாக தேவையான உதவிகளை செய்து தருமாறும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கிட அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னாள் பாஜக தலைவரும், ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன்,“கரூர் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தேன்…. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்… மேலும், தேவைப்படும் இந்த நேரத்தில் துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு உதவ கரூர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து பாஜக காரியகர்த்தாக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்…

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவைப்பட்டால், காரியகர்த்தா இரத்த தானம் செய்ய தயாராக இருக்க வேண்டும்… இந்த நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்போம்… தேவையான சிறந்த மருத்துவ சேவையை வழங்க மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்..” எனப் பதிவிட்டிருக்கிறார்.