
கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தநிலையில் இந்த சம்பவம் “எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு மிகப் பெரிய பாடமாக இருக்கிறது” என்றும் “இத்தகைய துயர சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.
பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கரூர் செல்லும் அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில்,
“கரூரில் நடைபெற்ற நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் உயிரிழந்த செய்தி தமிழ்நாடு முழுவதையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இச்சம்பவம் எதிர்கால நிகழ்வுகளுக்கு மிகப் பெரிய பாடமாக இருக்கிறது.
எந்தக் கட்சி, எந்த அமைப்பு பொதுக்கூட்டம் நடத்தினாலும், மக்களின் உயிர் பாதுகாப்பு முதன்மை என்று கருதி திட்டமிடல் செய்யப்பட வேண்டும்.
மருத்துவ அவசர உதவி, காவல்துறை ஒழுங்கு, அவசர வெளியேறும் வழிகள், மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், அனைத்தும் உறுதியாக இருக்க வேண்டும்.
மாநில அரசு உடனடியாக விசாரணை செய்து, பாதுகாப்பு குறைபாடுகள் எங்கே நடந்தன என்பதைக் கண்டறிந்து இத்தகைய துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு யார் காரணமோ அவர்கள் முழு பொறுப்பேற்கவேண்டும் (Fix Accountability). தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்.
இனி இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாதவாறு கடுமையான வழிமுறைகள் வகுக்க வேண்டும். அரசியல் கூட்டங்கள் மக்களின் உயிரைக் காவுகொள்வதற்கான மேடை அல்ல; மக்களின் உரிமைகளையும் நலன்களையும் காக்கும் மேடையாகவே இருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.