
சென்னை, வர்த்தக மையத்தில் வேளாண் வணிகத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இன்றும் நாளையும் (செப். 27 மற்றும் 28) நடைபெறும் இந்த வணிக திருவிழாவில் தமிழகம் முழுவதுமிருந்த 220-க்கும் மேற்பட்ட அரங்குகளில், சங்ககாலம் முதல் தற்காலம் வரை தமிழர்களின் வேளாண் வணிகம், பனை, தென்னை, ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள், மூலிகைப்பயிர்கள், முருங்கை, மஞ்சள், பலா, முந்திரி, நிலக்கடலை போன்ற பல்வேறு வேளாண் விளைபொருட்களின் சிறப்புகள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள் குறித்த கருத்து விளக்கக் கண்காட்சி அரங்குகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
விழாவை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “கல்வியில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. விவசாயிகளுக்கு நல்ல முன்னெடுப்பாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை வாய்ப்புகள் விவசாயிகளுக்கு உருவாகும். வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் முன்னேறி வருகிறது. மேட்டூர் அணையை குறித்த நேரத்தில் திறந்து வருகிறோம். உரங்களை போதிய அளவில் வழங்கும்படி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கடந்த நான்கு ஆண்டுகளில் 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வந்துள்ளோம்.

456.46 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டி உள்ளோம். தமிழகம் முந்திரி வாரியம் என்னும் தனி அமைப்பை உருவாக்கியுள்ளோம். சோழவந்தான் வெற்றிலை உள்ளிட்ட 7 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்று தந்துள்ளோம். பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மக்காச்சோளம், கரும்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது” என பேசினார். 1.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். முன்னதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வேளாண்துறை முதன்மைச் செயலர் தட்சிணாமூர்த்தி ஐ.ஏ.எஸ்ஸிடம் பேசியபோது, “தமிழகம் முழுவதும் உள்ள உழவர் உற்பத்த்தியாளர் நிறுவனங்கள், தங்களுடைய பொருள்களை நேரடியாக விற்பனை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செக்கு எண்ணெய், பாரம்பர்ய அரிசி வகைகள், அவல் வகைகள், முருங்கை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள், சிறுதானிய வகைகள் என்று பலவகையான பொருள்கள் இடம் பெற்றிருக்கின்றன. சென்னை மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

அரங்குகளில் பலா, பனை, சிறுதானிய ஐஸ் க்ரீம் வகைகள், நிலக்கடலை, தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய், சிறுதானிய பிஸ்கட் வகைகள், நொறுக்குத் தீனி வகைகள், புளி மிட்டாய், புளி பேஸ்ட், புளி கமர்கட், வாழை பிஸ்கட், தேன், தேன் அத்தி, கறுப்புக் கவுனி, சீரகச் சம்பா உள்ளிட்ட பாரம்பர்யா அரிசி வகைகள், பருப்பு வகைள், கருப்பட்டி, பனை சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை பால்கோவா, நெல்லிக்காய் ஜூஸ், முருங்கை சூப், வாழை சிப்ஸ், பலா சிப்ஸ், நீரா பானம், பாட்டில் இளநீர், சிறுதானிய நூடுல்ஸ், இலவம்பாடி முள் கத்திரிக்காய், நெய், வாழை நாரில் செய்யப்பட்ட சட்டை, புடவை உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன.

கிராமங்களிலிருந்து தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருள்கள் என்பதால் கிராமிய சந்தை போலவே காட்சியளிக்கிறது. அதுவும் நியாயமான விலையில் அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை மக்களே… கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் இந்தப் பொருள்களை வாங்கி பயன்படுத்த ஒருமுறை சென்று வாருங்கள். இன்றும் நாளையும் நடைபெ உள்ளது. அனுமதி இலவசம்.