
Àதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மத்தியில் ஆளும் பா.ஜக., கடந்த காலங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்திருக்கிறார்கள். ஒரு கட்சி ஆட்சி முறையினால் தமிழகத்தில் நடக்கும் அனைத்து அவலங்களுக்கும், ஊழல்களுக்கும் கனிமவளக் கொள்ளைகளுக்கும் வேலையில்லா திண்டாட்டத்திற்கும் வறுமைக்கும் இந்த ஒரு கட்சி ஆட்சிமுறை தான் காரணம். தமிழகத்தில் இந்த ஒரு கட்சி ஆட்சி முறை வரும் 2026-ல் நிச்சயமாக தீரும்.
தமிழகத்தில் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பும் சிந்தனையும் கூட்டணிக்கட்சி ஆட்சி முறைதான். 2026-ல் தனியாக ஒரு கட்சி ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவாக இருக்கிறது. கூட்டணி ஆட்சிக்கான காலம்தான் வரும் தேர்தலில் கனிந்து வருவதாகக் கருதுகிறேன். தி.மு.க –அ.தி.மு.க சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவில்லை என்றால் யார் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொள்கிறார்களோ அவர்கள்தான் வரும் தேர்தலில் முன்னிலை வகிப்பார்கள்.
தமிழகத்தில் நிலவும் பல பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டுமென்றால் நிச்சயமாக கூட்டணி ஆட்சி வர வேண்டும். மக்களுக்கு நேர்மையாக தொண்டாற்றக்கூடிய ஆட்சி வேண்டும் என்றால் கூட்டணி ஆட்சி தான். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க கூடிய ஆட்சிதான் தேவை. கூட்டணி ஆட்சி குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். வெளிப்படையாக பேசி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை எதையும் இந்த நிமிடம் வரை நிராகரிக்கவில்லை. வரும் ஜனவரி 7-ம் தேதி கட்சியின் மாநில மாநாடு மதுரையில் நடைபெறுகிறது.

அந்த மாநாட்டுக்கு பிறகுதான் எங்களுடைய கூட்டணி பற்றி ஒரு நிறைவான இறுதியான முடிவெடுக்க முடியும். ஆனால், எதையும் யாரையும் புறந்தள்ள மாட்டோம் . தமிழக வெற்றிக்கழகமோ அல்லது வேறு எந்த கழகமோ பூனை கருப்பா வெள்ளையா என்பதெல்லாம் பிரச்னை இல்லை அது எலியை பிடிக்கிறதா என்பதுதான் முக்கியம். கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுவதற்கு யார் தயாராக இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் எல்லாத்தையும் நாங்கள் பரிசீலிப்போம், கணக்கில் கொள்வோம்.” என்றார்.