
நாட்டில் இப்போது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய 3 தனியார் மொபைல் போன் நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிறுவனங்கள் படிப்படியாகத் தங்களது சேவை கட்டணத்தை அதிகரித்து வருகின்றன.
ஆரம்பத்தில் 99 ரூபாய்க்கு கொடுத்துக்கொண்டிருந்த மொபைல் சேவை கட்டணம் இப்போது குறைந்தபட்சம் ரூ.300 முதல் 350 வரை உயர்ந்திருக்கிறது.
மூன்று மொபைல் சேவை நிறுவனங்களும் 4ஜி சேவையைத் தாண்டி 5ஜி சேவையை வழங்க ஆரம்பித்துள்ளன. ஆனால் மத்திய அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல். மொபைல் சேவை நிறுவனம் அதிகமான இடங்களில் மொபைல் டவர்களே இல்லாமல் இருக்கிறது.
ஒரு சில இடங்களில் 4ஜி சேவை வழங்கி வந்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்குவதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.
இப்பணிகள் ஓரளவுக்கு முடிவடைந்துள்ளன. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்லின் 4 ஜி இணைய சேவையை தொடங்கி வைத்தார்.
இச்சேவை 92,600 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 4 ஜி சேவை வழங்கும் 97,500 டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 4 ஜி சேவைக்கான தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.37 ஆயிரம் கோடி செலவில் இந்த 4-ஜி சேவைக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்காலத்தில் எளிதில் 5-ஜிக்கு அளவுக்கு தரம் உயர்த்திக்கொள்ள முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில் இதுவரை தொலைத்தொடர்பு வசதிகளே இல்லாத 26700 கிராமங்களிலும் 4 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 லட்சம் பேர் தொலைத்தொடர்பு வசதி பெறுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள 4 ஜி டவர்களுக்கு தேவையான மின்சாரம் சோலார் மூலம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது டென்மார்க், ஸ்வீடன், சீனா, தென்கொரியா நாடுகள் மட்டுமே உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் 4 ஜி சேவையை வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் இப்போது இந்தியாவும் நுழைந்துள்ளது.
4 ஜி சேவை தொடக்க விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”இந்த 4 ஜி ஸ்வதேசி இணைய சேவையை தொடங்கி இருப்பதன் மூலம் இந்தியா தன்னிறைவை நோக்கி பயணிப்பதை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார்.