• September 27, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை மற்றும் எல்ஸ்வேர் நிறுவனம் இணைந்து உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளின் பட்டியலைத் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட இந்த தரவரிசைப் பட்டியலில் 22 அறிவியல் துறைகள் மற்றும் 174 துணைத் துறைகளின் கீழ் உலகம் முழுவதும் உள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

செந்தில் மணிராஜன்

இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3500-க்கும் அதிகமான விஞ்ஞானிகள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் பாம்பனைப் பூர்வீகமாகக் கொண்ட ஆராய்ச்சியாளர் செந்தில் மணிராஜன் என்பவரும் இடம் பிடித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியராக செந்தில் மணிராஜன் பணியாற்றி வருகிறார்.

அங்கு இயற்பியல் துறையின் தலைவராகவும் அவர் உள்ளார். இவர், பல்வேறு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து புற்றுநோயினை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

சான்றிதழ்

ரத்தம் இன்றி மனிதரின் உமிழ்நீரைப் பரிசோதனை செய்து புற்றுநோயை முன் கூட்டியே அறிந்து கொள்ள ஆப்டிகல் பைபரை பயன்படுத்தி பயோ சென்சார் பிரிவில் ஆராய்ச்சியினை தொடர்ந்து வருகிறார்.

தனது துறை தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார். இதன் வழியாக உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் செந்தில் மணிராஜன் இடம் பிடித்துள்ளார்.

தொடர்ந்து நான்காவது முறையாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்த செந்தில் மணிராஜனை சென்னை அண்ணா பல்கலைக் கழக உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் இராமநாதபுரம் பொறியியல் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *