
‘காந்தாரா’ திரைப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் அடுத்த பாகத்தை படக்குழுவினர் எடுத்து அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு கொண்டு வருகிறார்கள். ‘காந்தாரா’ படத்தின் ப்ரீக்வலாக இதை எடுத்திருக்கிறார்கள்.
ப்ரீக்வல் என்பதால் ‘காந்தாரா சாப்டர் 1’ எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இப்படத்தில் ருக்மினி வசந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “உளவியல் ரீதியாகவும் காந்தாராவுக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ள அசைவ உணவைச் சாப்பிடாமல் இருந்தீர்களாமே?” எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் தந்த நடிகர் ரிஷப் ஷெட்டி, “அனைத்து நேரங்களிலும் அப்படி செய்யவில்லை. தெய்வ காட்சிகளை ஷூட் செய்யும்போதுதான் அப்படி இருந்தேன். இதை வேறு விதமாக கனெக்ட் செய்துவிடுவார்கள்.
இதுவரை அது நான் செய்யாத விஷயம். அதை செய்யும்போது எனக்குள் ஒரு தெளிவு வேண்டும். அதே சமயம், எனக்குள் எந்தக் குழப்பங்களும் இருக்கக்கூடாது. நான் மிகவும் நம்பும் தெய்வம் அது.

அதனால் அந்த சமயத்தில்தான் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றினேன். தெய்வீகக் காட்சிகளை ஷூட் செய்யும்போது எப்போதும் மேற்கொள்ளும் சாதாரண ஷூட்டிங் போல நாங்கள் செய்யவில்லை.
அதை நான் எப்போதும் கவனத்துடன் செய்வேன். எனக்கு ஒரு சமாதானத்திற்காக நான் அதைச் செய்வேன். நிச்சயமாகவே நான் தீவிரமான பக்தன்தான். ஆனால், இதனை வேறு வடிவில் பலர் கனெக்ட் செய்துவிடுவார்கள்.
நான் உங்களுடைய நம்பிக்கையைக் கேள்வி கேட்கமாட்டேன். உங்களுடைய நம்பிக்கைகளுக்கு நான் மரியாதை தருகிறேன். என்னுடைய நம்பிக்கைகளுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும், அவ்வளவே!” என்று முடித்துக் கொண்டார்.