
புதுடெல்லி: பேரியம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுவதாகத் தெரிவித்து அவற்றைத் தடை செய்யக் கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
இதனிடையே பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தேசிய தலைநகரப் பகுதிகளில்(என்சிஆர்) கடந்த 2024-ம் ஆண்டு தடை விதித்தது. இதனால் பட்டாசு தொழிலை மட்டுமே நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமயிலான அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.