
கழிவறையில் மொபைல் போன் வைத்து சக பெண் ஊழியர்களை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மின்வாரிய அலுவலகம் ஒன்றில் மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரன் (வயது 33) என்பவர் வணிகப்பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் சமீபத்தில் கழிவறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து ராஜராஜேஸ்வரன் சென்றுள்ளார். பின்பு அந்தப் பெண் ஊழியர் கழிவறையில் இருப்பதை ஜன்னல் வழியாகத் தன்னுடைய மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார்.
இதைப் பார்த்துவிட்ட அந்தப் பெண் ஊழியர் கூச்சலிட, அங்கிருந்து தப்பிய ராஜராஜேஸ்வரன், தனது இடத்தில் அமர்ந்து எதுவும் நடக்காதது போல வேலை செய்திருக்கிறார்.
சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் இதுகுறித்து சக ஊழியர்களிடமும் உயரதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பெயரில் ராஜராஜேஸ்வரனின் மொபைல் போனை வாங்கி சோதனை செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பல பெண் ஊழியர்களை கழிவறை உள்ளிட்ட பல இடங்களில் ஆபாசமாக வீடியோ பதிவு செய்து மொபைலில் சேமித்து வைத்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்ய ராஜராஜேஸ்வரன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் மதுரை மாவட்ட மின்சார வாரிய ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.