
புதுடெல்லி: போலி என்கவுன்ட்டர் என புகார் அளிக்கப்பட்டதால், மாவோயிஸ்ட் கமாண்டர் கதா ராமசந்திர ரெட்டியின் உடலை பாதுகாத்து வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் கடந்த 22-ம் தேதி நடத்திய என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் கமாண்டர் கதா ராமசந்திர ரெட்டி. ஆனால், போலி என்கவுன்ட்டரில் தனது தந்தை கொல்லப்பட்டதாக கதா ராமசந்திர ரெட்டியின் மகன் ராஜ சந்திரா குற்றம்சாட்டினார்.
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் பண்டிகை விடுமுறை காரணமாக, அங்கு அவரது மனு அவசரமாக விசாரிக்கப்படவில்லை. இதனால் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இவரது மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தத்தா, ஏ.ஜி.மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.