
“உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினைகள மனசுல வச்சிக்கிட்டு ஒழுங்கா தேர்தல் வேலை பார்க்காம உள்குத்து வேலை செஞ்சு அதனால தொகுதி கைவிட்டுப் போச்சுன்னா உங்க யாருக்கும் பதவி மிஞ்சாது பாத்துக்கோங்க” ஏலகிரி மலையில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தான் கழக கண்மணிகளுக்கு இப்படி கண்டிப்பு மணி அடித்திருக்கிறார்.
‘வெல்வோம் 200… படைப்போம் வரலாறு’ என சூளுரைத்துக் கிளம்பி இருக்கும் திமுக, தேர்தல் ஓட்டப் பந்தயத்தில் மற்ற கட்சிகளைவிட சற்று வேகமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. அரசின் திட்டங்களைச் சொல்லி மக்களுக்கு நெருக்கமாகி வரும் அதேவேளையில், தமிழகத்தை 8 மண்டலங்களாகப் பிரித்து முக்கிய அமைச்சர்களை அதன் பொறுப்பாளர்களாக நியமித்தும் தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறது திமுக தலைமை. மண்டலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு சராசரியாக 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களின் தலைக்கும் கத்தி இருக்கிறது என்பதால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மண்டலப் பொறுப்பாளர்கள் பம்பரமாய் சுற்றிச் சுழன்று வருகிறார்கள்.