• September 26, 2025
  • NewsEditor
  • 0

மேற்கத்திய இராணுவ கூட்டணியான நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, அமெரிக்கா வரிவிதிப்புக்குப் பிறகு இந்தியா தரப்பில் ரஷ்யாவிடம் உக்ரைன் போர் யுத்தி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியதை முற்றிலுமாக மறுத்துள்ளது இந்திய அரசு.

ஆதாரமற்ற அறிக்கை

Mark Rutte with Trump

பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நேரடியாக உரையாடினார் என மார்க் ருட்டே தெரிவித்தது குறித்து வெளியுறவுத்துறை இன்று (செப்டம்பர் 26) வெளியிட்ட அறிக்கையில், அத்தகைய பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை என்றும், எதிர்காலத்தில் நேட்டோ தலைவர் எச்சரிக்கையாக பேச வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.

“பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக NATO பொதுச் செயலாளர் மார்க் ருட்டே வெளியிட்ட அறிக்கையை நாங்கள் கவனித்துள்ளோம்.

அந்த அறிக்கை முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது. பிரதமர் மோடி, அதிபர் புதினுடன் கூறப்பட்ட விதத்தில் எக்காரணத்திலும் பேசவில்லை. இப்படியான எந்த உரையாடலும் நடைபெறவில்லை.” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க் ருட்டே பேசியதென்ன?

Modi and Putin

நியூயார்க்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐ.நா பொதுச்சங்கக் கூட்டத் தொடர் நிகழ்வின்போது CNN செய்திதளத்துக்கு அளித்த பேட்டியில் மார்க் ருட்டே, “இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரி ரஷ்யாவுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக டெல்லி – புதினுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்தது. இந்தியா சுங்கவரி சுமையை எதிர்கொண்டு வருவதால், உக்ரைன் தொடர்பான தந்திரத்தை விளக்குமாறு நரேந்திர மோடி அவரிடம் கேட்டார்” எனக் கூறினார்.

இந்தக் கருத்தை முன்னிட்டே நேட்டோ தலைவர் எச்சரிக்கையாக பேச வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது இந்திய அரசு. வெளியுறவுத்துறை அறிக்கையில், “நேட்டோ போன்ற முக்கியமான அமைப்பின் தலைமையில் இருந்து பொது அறிக்கைகள் வெளியாகும்போது அதிக பொறுப்புணர்வும், துல்லியத்தன்மையும் எதிர்பார்க்கிறோம்.

பிரதமரின் சந்திப்புகளை தவறாக விளக்கும் அல்லது ஒருபோதும் நிகழாத உரையாடல்களை நிகழ்ந்ததாகக் கூறும் ஊகிக்கப்பட்ட அல்லது கவனக்குறைவான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.” எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்னெய் இறக்குமதி செய்வது குறித்த விமர்சனங்களுக்கும் பதிலளிக்கப்பட்டது. “முன்னதாகக் கூறியபடி, இந்தியாவின் எரிபொருள் இறக்குமதிகள், இந்திய நுகர்வோருக்கான நிலையான மற்றும் மலிவான எரிசக்தி விலைகளை உறுதி செய்வதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியா தனது தேசிய நலன்கள் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் மேற்கொள்ளும்.” என உறுதிபடுத்தியது அந்த அறிக்கை!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *