• September 26, 2025
  • NewsEditor
  • 0

ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக்கை, மத்திய பாஜக அரசு 2019ல் அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, சட்டமன்றமில்லாத யூனியன் பிரதேசமாக மாற்றியது. இந்நிலையில்தான் லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​து வழங்கக் கோரியும், அரசியலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலியுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்களாக உண்ணாவிரதம் மேற்​கொண்டு வந்​தார்.

லடாக் வன்முறை

இந்​நிலை​யில் அவரது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும் வகையில் லடாக்கில்  முழு அடைப்பு போராட்​டத்​துக்கு ‘லே அபெக்ஸ் பாடி’ என்ற அமைப்​பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்​தது.

ஆனால், அது வன்முறையில் முடிந்தது. காவல்துறையினர் – போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்ட மோதலில்  போலீஸ் வாகனங்கள், லே பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது.

இதனையடுத்து காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டு, துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கலவரத்தில் 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். வன்முறை காரணமாக லே நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறைக்கு முழுகாரணம் சோனம் வாங்​சுக் என்று மத்திய அரசு குற்றம் சாட்டி இருக்கிறது. மேலும் அவர் நிறுவிய கல்வி அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி உதவியை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. மத்திய அரசு குற்றச்சாட்டும் இந்த சோனம் வாங்​சுக் யார்? 

போராட்டத்தில் சோனம் வாங்​சுக்...
போராட்டத்தில் சோனம் வாங்​சுக்…

சோனம் வாங்​சுக்

1966-ல் லடாக்கில் பிறந்தவர் சோனம் வாங்சுக்.  கல்வியாளர், கண்டுபிடிப்பாளர், சமூக சீர்திருத்தவாதி, சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முகத் தன்மைகளைக் கொண்ட சோனம் வாங்சுக் கடந்த 2009-ம் ஆண்டு ஆமிர் கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர். 

1988-ல் சோனம் வாங்சுக் லடாக்கில் கல்வி முறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த Students’ Educational and Cultural Movement (SECMOL) என்ற அமைப்பை தொடங்கினார்.

அந்தக் கல்வி முறை லடாக்கின் கலாசார, சுற்றுச்சூழல் தன்மைக்கு ஏற்றதாக இருக்கும் என்று அவர் குரல் கொடுத்து வந்தார். ஏட்டுக் கல்வியோடு நிறுத்தாமல் மாணவர்களுக்கு செயல்முறை கல்வி வழங்க வேண்டும் என்பதே அவரது இலக்கு.

கண்டுபிடிப்புகள்

இவரது அறிவியல் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது லடாக் பகுதியின் நீர் பஞ்சத்தை தீர்க்க குளிர்காலத்தில் செயற்கை பனிக்கட்டிகள் (Ice Stupas) உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தது மற்றும் லடாக் மக்களுக்காக மைனஸ் 15 டிகிரி குளிரையும் தாக்குப்பிடிக்கும் வகையிலான களிமண் வீடுகளை உருவாக்கியது.

2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் இந்தியா மோதலில் ஈடுபட்டபோது, ‘எல்லையில் வீரர்கள் சண்டை போடட்டும். நாம் சீனப் பொருட்களை வாங்காமல் ‘வாலட் பவர்’ (Wallet Power) காட்டுவோம்’ என்று முழங்கியவர்.

சோனம் வாங்​சுக்
சோனம் வாங்​சுக்

மீண்டும் போராட்டம்

2024 மார்ச் மாதம் லடாக் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார் சோனம் வாங்சுக். தொடர்ந்து 2024 செப்டம்பரில் வாங்சுக், லே முதல் டெல்லி வரை ‘டெல்லி சலோ’ பாதயாத்திரை என்ற பெயரில் மாநில அந்தஸ்துக்கான பாதயாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.

லடாக் கலாசார, சூழலியல் அடையாளத்தை பாதுகாக்க வலுவான சட்டப்பேரவை வேண்டும். அதில், உள்ளூர்வாசிகளின் குரல்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்றுதான் மீண்டும் லடாக்கிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்  சோனம் வாங்சுக். 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *