
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயண பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி, வாரந்தோறும் சனிக்கிழமை ஒவ்வொரு மாவட்டமாகப் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்திற்கான திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை 27-ந் தேதி காலையில் நாமக்கல்லிலும் பின்னர் கரூரிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் எஸ்.வி.சேகரின் தந்தை எஸ்.வி.வெங்கடராமன் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை அரசு வைத்துள்ளது. இதையடுத்து தனது குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் எஸ்.வி.சேகர்.
எல்லோருக்குமான முதல்வர் ஸ்டாலின்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னால் நிற்பது எனது வாழ்நாள் கடமை. 2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளேன். குறிப்பிட்ட சமூகத்தினருக்கு திமுக எதிரானது என்று பேசப்படுவது அரசியலுக்காக சொல்லப்படுவது. எல்லோருக்குமான முதல்வராகவே நம் முதல்வர் இருக்கிறார்.
ஜிஎஸ்டி மாற்றம்
ஜி.எஸ்.டி.யை குறைத்ததால் மக்களுக்கு நன்மை என்கிறார்கள். முதலில் அந்த ஜி.எஸ்.டி.-யை போட்டது யார்? அப்போதே போடாமல் இருந்திருந்தால் பல லட்சங்கள் சேமித்திருப்பார்கள் மக்கள். இனி ஜி.எஸ்.டி குறைத்தாலும் விலைகளெல்லாம் குறையாது.

கோடம்பாக்கத்திலிருந்து நேரடியாக கோட்டைக்கு வந்தவர் இல்லை எம்.ஜி.ஆர். திமுக-வின் வளர்ச்சிக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து, பின் சிறு பிரச்னையால் தனிக்கட்சி ஆரம்பித்தவர். சினிமாவில் டூயட் பாடிவிட்டு, நேரடியாக எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தார் என விஜய் நினைத்தால், விஜய்க்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். மனப்பாடம் செய்து பேசுவது, ’அங்கிள்’ என்றெல்லாம் பேசுவது கைத்தட்டலுக்கு மட்டுமே உதவும்… வாக்காக மாறாது” என்று பேசியிருக்கிறார்.