
தமிழ் மற்றும் இந்தி திரைத்துறையில் தனக்கென ஒரு தனி ரசிகர்களைக் கொண்டவர் மாதவன்.
இந்திய விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தை இயக்கியும், நடித்தும் கவனம் ஈர்த்திருந்தார். இதையடுத்து இந்தியில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது சம்பளம் வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்கிறதா என்பது குறித்துப் பேசுகையில், “எங்களுக்கெல்லாம் ஓய்வூதியம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. சில படங்களில் சொன்ன சம்பளம் தர மாட்டார்கள்.
படங்களில் வாய்ப்பு கிடைக்கும்போதே வாழ்க்கைக்கு, குழந்தைகளுக்கு, குடும்பத்திற்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.
என்னுடைய குழந்தைகள் வாழ நான் நடித்த ‘3 Idiots’, ‘Rang De Basanti’, ‘Tanu Weds Manu’ மூன்று படங்களில் சம்பாதித்த பணமே போதும்தான், ஆனால் அந்தப் பணத்தை அவர்கள் சரியாகக் கையாண்டால்தான் நிலைக்கும்.
இல்லையென்றால் கஷ்டம்தான். நாம் உருவாக்கிக் கொண்ட வாழ்க்கை முறையைப் பராமரிப்பதற்கே ஓடி ஓடி சம்பாதித்தாக வேண்டும். அதனால் எதிர்காலத்திற்கு முடிந்த அளவிற்குச் சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நடிகர் ஷாருக் கான் இளம் வயதிலேயே தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தது உச்சத்தில் இருக்கும்போதே நன்றாகச் சம்பாதிக்கத்தான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், வெப்சீரியஸ் என என்னால் முடிந்த அளவிற்கு உழைத்து என்னுடைய, என் குடும்பத்தின் எதிர்கால வாழ்க்கைக்காகச் சம்பாதித்து வருகிறேன்” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகர் மாதவன்.