
ராமநாதபுரம் அண்ணா நகர் குருவிக்காரன் தெருவைச் சேர்ந்தவர் ராஜ பிரகாஷ் (17). இவர் ராமநாதபுரத்தில் உள்ள கறிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வேலை முடித்து வீடு திரும்பிய இவரை தெருநாய் ஒன்று கடித்துள்ளது. ஆனால் அதற்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில் அவருக்கு ரேபிஸ் நோய் தாக்கம் ஏற்படவே ராமநாதபுரம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்குத் தனி அறையில் தங்கி சிகிச்சை பெற வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த அவர் ராமநாதபுரம் திரும்பி விட்டார்.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன் ராஜ பிரகாஷ் இறந்த நிலையில் அவரது உடலை குடும்பத்தினர் எரியூட்டினர். இதனால் நாய்க் கடிக்கு உள்ளாகி இறந்த ராஜ பிரகாஷ் ரேபிஸ் நோய் தாக்கி இறந்தாரா என்பதை சுகாதாரத் துறையினரால் உறுதி செய்ய முடியவில்லை.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா நகரில் வசிக்கும் மக்களின் அச்சத்தினைப் போக்க, ராஜ பிரகாஷ் வீடு அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் 127 பேருக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.
தெரு நாய்க் கடிக்கு உள்ளான வாலிபர் ரேபிஸ் நோய் தாக்கத்தினால் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.