
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலை நிகழ்ச்சிகளுடன் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ – கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கல்விக்காக தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள பிரத்தியேக திட்டங்கள், சாதனைகள் பற்றிய கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பல அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுடன் திரைக்கலைஞர்களும் கலந்துகொண்டனர்.
பசியினால பலர் படிப்பை நிறுத்திட்டாங்க
அந்த வகையில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பைக் கேட்கும்போதே பெருமையாக இருந்தது. வாழை ரிலீஸ் ஆன போது திடீர்னு ஒரு போன் கால் வந்துச்சு. என்கிட்ட முதலமைச்சர் அமெரிக்கால படம் பாத்துட்டு இருக்கார். உங்களுக்கு கால் பண்ணுவார்ன்னு சொன்னாங்க.
அப்ப அவர் கால் பண்ண வெயிட் பண்ணினேன். என்னுடைய எல்லா படங்களும் கால் பண்ணி பேசி இருக்காரு. வாழைக்கு நான் ஸ்பெஷலா வெயிட் பண்ணினேன். ஏன்னா தமிழ்நாட்டோட முதல்வர் வாழை மாதிரி ஒரு படத்த பாத்துட்டு, என்ன சொல்லுவாரு அப்படின்னு தெரிஞ்சிக்க…
கால் வந்துச்சு பேசினாரு என்கிட்ட… அன்றைக்கு அந்தக் கதை நிகழ்ந்த காலகட்டத்தில் இருக்கும்போது எனக்கு என்ன மனநிலை இருந்துச்சசோ அந்த மனநிலையில் இருந்தேன். சிவனேசன் கிட்ட அவர் கால் பண்ணி பேசினதுபோல இருந்தது. கிட்டத்தட்ட கண்ணீர் சொட்டின மாதிரியான ஒரு உணர்வு.
அந்தப் படத்துல ஒரு சீன் இருக்கும். தமிழ்நாடு அரசு கிட்ட அதை என்னைக்காவது பதிவு பண்ண நினைச்சேன். அந்தப் பையன் வாழைப் பழத்தைத் திருடுவான். நான் முதன்முதலாகத் திருடியது வாழைப்பழத்தைத்தான். பசியிலதான் திருட்டு பழக்கத்தைக் கத்துகிட்டேன்.
என் ஸ்கூல் 4 கிலோமீட்டர் தூரம். பசியோடதான் நடந்து போவோம், வருவோம். வீட்டில் சமைக்க அம்மா, அப்பா வீட்டிலேயே இருக்க மாட்டார்கள். நாங்கள் எழும் முன்னரே வேலைக்குச் சென்றுவிடுவார்கள்.
வாழைத் தோட்டத்தில் பழம் பறித்து சாப்பிடுவதுதான் எங்கள் உணவே. பசியினால் தினசரி போராட்டமாக இருக்கும். அன்னைக்கு பள்ளிக்கூடம் ரொம்ப தூரம். அவ்வளவு தூரத்துக்குப் போயிட்டு திரும்பி வர முடியாது. பசியினால என்கூட படிச்ச பலர் படிப்பை நிறுத்திட்டாங்க.

காலை உணவு திட்டம் வந்தபோது நிறைய பேர் போன் பண்ணி பேசினாங்க. அன்னைக்கு நான் இருந்த அளவு யாருமே மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியாது. ஏன்னா நினைச்சு பார்க்கும்போது ரொம்ப முக்கியமான விஷயமா இருந்துச்சு.
அது ஒரு முக்கியமான பாய்ச்சலா நான் பாக்குறேன், என்கூட படிச்சு, படிப்ப தொடர முடியாம போன அத்தனைப் பேருக்கும் பெரிய அழுகையா இருந்திருக்கும்… அதுக்காக ரொம்ப நன்றி ஐயா!” என்றார்.
பள்ளிக்கூடங்களில் சமூகநீதியும் சமத்துவமும்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்துப் பேசுகையில், “பள்ளிக்கூடத்துக்குள்ள நான் கத்துக்கிட்டது, முழுக்க முழுக்க பள்ளிக்கூடத்துல மீற முடியாத தாண்ட முடியாது ஜெயிக்க முடியாத ஒரு விஷயம் அப்படிங்கறது, சாதிய உளவியல் தான்.
அதை மீற முடியாம, அதுக்குள்ள அடங்கவும் முடியாம பட்ட கஷ்டம் ஜாஸ்தி. இன்னைக்கு பள்ளிகளில் சமூகநீதி என்கிற வார்த்தையும், சமத்துவம் என்கிற வார்த்தையும் ஓங்கி ஒலிக்க வைக்கக்கூடிய செயலை வந்து நம்ம பள்ளிக் கல்வி துறை செஞ்சுக்கிட்டே இருக்கு.
அதுல ஒரு பெரிய பாய்ச்சலா நான் பாக்குறது பள்ளிக்கூடங்களில் இருக்கக்கூடிய சாதி பெயர்களை அகற்றினது. என்கிட்ட “பள்ளிக்கூடமே எங்க பள்ளிக்கூடம்தான் தெரியுமான்னு” சொல்லி இருக்காங்க. பள்ளிக்கூடத்துக்குள்ள நடக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய யுத்தத்தை, இன்னொரு அறிவு யுத்தமா மாத்துன பங்கு கல்வித்துறைக்கு இருக்கு. அதுக்கு கோடான கோடி நன்றிகள்” என்றார்.