• September 26, 2025
  • NewsEditor
  • 0

பீகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் சமீபத்தில் நீக்கப்பட்டார்.

அவர் பெண் ஒருவருடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதையடுத்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக 6 ஆண்டுகளுக்குக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு புறம் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

தற்போது புதிய திருப்பமாக லாலு பிரசாத் யாதவ் மூத்த மகன் தேஜ் பிரதாப் புதிய கட்சியை ஆரம்பித்து இருக்கிறார். இன்று அதிகாலை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தேஜ் பிரதாப்

ஜனசக்தி ஜனதா தளம் என்று தனது கட்சிக்குப் பெயர் வைத்திருக்கிறார். அதோடு தனது கட்சிக்குச் சின்னமாக பிளாக்போர்டை தேர்வு செய்து இருப்பதாகவும் சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் தேர்தல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அதில், ‘ஜன் ஜன் கி சக்தி, ஜன் ஜன் க ராஜ், பீகார் கா விகாஸ் கரேங்கே தேஜ் பிரதாப் (Jan Jan ki Shakti, Jan Jan ka Raj, Bihar ka Vikas karenge Tej Pratap)’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“பீகாரின் முழுமையான வளர்ச்சிக்கு நாங்கள் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படத் தயாராக உள்ளோம். விரிவான மாற்றத்தைக் கொண்டு வந்து ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

இந்த இலக்கை அடைய நீண்ட போராட்டத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று தேஜ் பிரதாப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கூட்டணி குழப்பத்தில் இருக்கும் லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவிற்கு தேஜ் பிரதாப் யாதவ் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் மஹுவா தொகுதியில் போட்டியிடப்போவதாகவும், தனது சகோதரர் தேஜஸ்வியுடன் எந்த வித உடன்பாடும் வைத்துக்கொள்ளமாட்டேன் என்றும் தேஜ் பிரதாப் தெரிவித்து இருக்கிறார். இதனால் பீகார் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது.

தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத் யாதவ்

மற்றொரு புறம் பீகாரில் குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு ரூ.10 ஆயிரம் இன்று அவர்களது வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட இருக்கிறது. மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு முன்பு பெண்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி தேர்தலில் வெற்றி பெற்றது போன்று, மீண்டும் பீகாரில் வெற்றி பெற பெண்களைக் குறிவைத்து மாநில அரசு, அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்துகிறது.

அதோடு பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவும், முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தொகுதிகளைச் சமமாகப் பிரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *