• September 26, 2025
  • NewsEditor
  • 0

‘உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல வட இந்திய மாநிலங்களின் வருவாய், உபரியில் இருக்கின்றது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களின் வருவாய், பற்றாக்குறையில் இருக்கிறது’ என்று கூறியுள்ளது, 2022-23 நிதியாண்டுக்கான மாநிலங்களின் பொருளாதாரச் செயல்திறன் குறித்த ‘சி.ஏ.ஜி’ (CAG-Comptroller and Auditor General of India) அறிக்கை.

இந்த அறிக்கையில், அதிக வருவாய் உபரி கொண்ட 16 மாநிலங்களின் பட்டியலில் பெரும்பாலானவை வட இந்திய மாநிலங்கள்; பா.ஜ.க ஆளும் மாநிலங்கள். ரூ.37,000 கோடி உபரியுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் குஜராத் (ரூ.19,865 கோடி), ஒடிசா (ரூ.19,456 கோடி), ஜார்க்கண்ட் (ரூ.13,564 கோடி), கர்நாடகா (ரூ.13,496 கோடி) உள்ளன.

அதுவே, அதிக வருவாய் பற்றாக்குறை கொண்ட 12 மாநிலங்களில் 6 மாநிலங் களில், எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது. இதில், ரூ.43,488 கோடி பற்றாக் குறையுடன் ஆந்திரா முதலிடத்திலும், ரூ.36,215 கோடி பற்றாக்குறையுடன்

தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான் (ரூ.31,491 கோடி), மேற்கு வங்கம் (ரூ.27,295 கோடி) பஞ்சாப் (ரூ.26,045 கோடி) உள்ளன.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து, ‘உத்தரப் பிரதேசம் மிகச் சிறப்பான பொருளாதார செயல்திறனை, சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது’ என்று ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தகவல்கள் பரவிவருகின்றன. அதேசமயம், ‘இந்த வருவாய் உபரி மற்றும் வருவாய்ப் பற்றாக்குறைக்குப் பின்னால் மறைந்திருக்கும் காரணங்களைத்தான் முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்கிறார்கள், பொருளாதார வல்லுநர்கள் சிலர்.

‘பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு வரிப் பகிர்விலும் சரி, திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளிலும் சரி… எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பாகுபாடு காட்டிவருகிறது. கடந்த கால நிதி ஒதுக்கீடுகளையும், வரிப் பகிர்வு புள்ளிவிவரங் களையும் பார்த்தாலே இது தெரியும். வளர்ச்சியிலும், நாட்டின் ஜி.டி.பி பங்களிப் பிலும் அதிகப் பங்கு வகிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள்கூட வருவாய்ப் பற்றாக்குறையில் இருக்கக் காரணமே… மத்திய அரசிடமிருந்து நியாயமான நிதி கிடைக்காததுதான். அத்துடன், மூலதனச் செலவு அதிகம் செய்யும் மாநிலங்களில் பற்றாக்குறை இருக்கவே செய்யும்; அங்கு வளர்ச்சி குறைவாக இருந்தால்தான் கவலைப்பட வேண்டும்’ என்று சொல்லும் பொருளியல் நிபுணர்கள், “மாநில அரசை விடுங்கள், மத்திய அரசின் அமைப்பான ரயில்வே துறையை எடுத்துக் கொண்டால், அதிகமான வருவாயை ஈட்டித்தருகிறது, தென்னக ரயில்வே. ஆனால், வட இந்திய ரயில்வேக்குத்தான் அதிக நிதி ஒதுக்கீடும் திட்டங்களும் வாரி வழங்கப்படுகின்றன’’ என்று வருத்தத்தைப் பதிவு செய்கிறார்கள்.

நரேந்திர மோடி, 2013-ல் குஜராத் முதல்வராக இருந்தபோது, ‘எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களிடம் மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது’ என்று முழக்க மிட்டார். இன்றைக்கு அவரை நோக்கி அதே முழக்கம் எழுப்பப்படுகிறது… எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலிருந்து!

– ஆசிரியர்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *