
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
“எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே”
என்ற கேப்ஷன் முதற்கொண்டு விகடனை விரும்ப, விஷயங்கள் ஏராளம். இது தாயுமானவரின் 221வது பராபரக்கண்ணி பாடல். இந்தப் பாடலைக் கவனித்துக் கருத்தில் கொண்டு சிந்தித்ததும், மனதை விசாலப்படுத்தியதும் விகடனில் பார்த்த/படித்த பின்பு தான். என்னைப் பெரிதும் ஈர்த்த விஷயங்களில் முதன்மையானது இந்த கேப்ஷன் தான்.
ஓவியர் ‘மாலி‘ வரைந்த, ஆச்சரியமும், அகண்ட சிரிப்பும், உற்சாகமுமாய் இருக்கும் விகடன் தாத்தாவில் தொடங்கி, அட்டை டு அட்டை அனைத்தும் அருமையோ அருமை தான். அட்டையில் வரும் புகைப்படம் முதல், கட்டுரைகளுக்கு வரும் படங்கள், ஓவியங்கள், கார்ட்டூன்கள் அனைத்தும் எப்போதும் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் தரமிக்கதாக இருப்பதும் சிறப்போ சிறப்பு தான்.
பெயருக்கேற்றபடி பெரும்பாலான விஷயங்களை சுவாரசியமாக, ரசனையுடன் கூடிய நகைச்சுவையாக தருவதில் விகடனுக்கு நிகர் விகடன் தான்.
வீட்டில் இருந்து தான் விகடன் எங்களுக்கு அறிமுகம். அப்பா, சித்தப்பா எல்லாரும் தொடர்ந்து விகடன் படிப்பவர்கள். அதை எங்களுடன் விவாதிப்பவர்களும் கூட. எங்க சித்தப்பா கடிதம் எழுதும்போது கூட, விகடன் ல இத படிச்சியா அத படிச்சியா அப்படின்னு கேக்குற அளவுக்கு விகடன் எங்களுக்கு நெருக்கம் தான். ஊரிலிருந்து சென்னைக்கு வரும்போது பேருந்தில் படிக்க எங்களுக்கு அப்பா வாங்கிக் கொடுக்கும் புத்தகம் விகடன் தான்.
வாசிக்கும் ஆவலை மேலும் மேலும் தூண்டும் வகையில், மனதை கொள்ளைக் கொள்ளும் தொடர்கள், தொடர்கதைகள் ஏராளம். நினைவை விட்டு மறையாத தொடர்களில் ஒன்று சுவாமி சுகபோதானந்தாவின் “மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்!!”. தலைப்பே ரொம்ப யதார்த்தமா மனசுக்கு நெருக்கமா இருந்துச்சு.(“சொல்லிட்டீங்கள்ள….. ரிலாக்ஸ் ஆயிட்டா போச்சு”). நம்ம பக்கத்துல உட்கார்ந்து நம்மகிட்ட பேசுவது போல இருக்கும் அந்த எழுத்தும் கருத்தும். நாங்கள் சகோதரிகள் அனைவரும் மிகவும் விரும்பிப் படித்து விவாதித்த தொடர்.
விகடன் வழியாகவே எழுத்தாளுமை சுஜாதா, கார்ட்டூனிஸ்ட் மதன் மற்றும் பலரின் படைப்புகளை எல்லாம் அதிகம் அறிந்து இரசித்திருக்கிறோம். விஞ்ஞானத் தொடர்கள், அரசு பள்ளிகளைப் பற்றிய தொடர், அந்தந்த காலத்திற்கு ஏற்றார்போல் வரும் உளவியல் தொடர்கள், தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதைகள், விளையாட்டுக் கட்டுரைகள், முக்கியமாக ஜோக்குகள்….. இதைப் போல சொல்லிக்கொண்டே போகலாம்.
எனக்கு மிக மிக முக்கியமான உணவியல், வாழ்வியல் விழிப்புணர்வுக்கு வித்திட்டது விகடன் தான். “அவள் விகடனில்” ஒரு உணவுத் திருவிழாவில் சிறுதானியங்களில் சமைத்த உணவும், அதன் பயன்களும் பற்றி வெளியான ஒரு கட்டுரை தான் சிறுதானியங்கள் குறித்த முதல் அறிமுகம் எனக்கு. அதைப் பற்றிய தேடல் தொடங்கிய சில நாள்களில் அதற்கான விடை “ஆனந்த விகடனில்” விருந்தாகவே(“தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசியிருக்கும்!!) வந்தது. ஆம். எப்போதுமுள்ள ஆர்வத்துடன் விகடனின் பக்கங்களைப் புரட்டும் போது கண்ணில் பட்டது “ஆறாம் திணை” தொடரின் முதல் அத்தியாயம்.
அகம், முகம் நிறைந்த புன்னகையுடன் மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் முழு உருவப் புகைப்படம். (பார்த்தவுடன் எங்க சித்தப்பா ஞாபகம் தான் வந்தது. ஏன் என்று தெரியவில்லை). அவர் நின்ற தோரணையும், நம்மையும் புன்னகையுடன் ரசிக்க வைத்த அந்த புகைப்படம் அவ்வளவு அழகு. அவர் முகத்தில் மட்டுமல்ல, அத்தியாயத்தை படித்த அனைவர் முகத்திலும் புன்னகையை வரவழைக்கும் ஒரு அற்புதமான அழகான ஆரம்பம். மக்கள் மத்தியில் சிறுதானியங்களை பற்றிய விழிப்புணர்வின் ஆரம்ப புள்ளி அந்தத் தொடர் தான் என்பதை ஆணித்தரமாக சொல்லலாம்.

கொஞ்சம் கூட அலுப்பை ஏற்படுத்தாமல், தொய்வில்லாமல் ஆர்வத்தை தூண்டும் வகையில் மேன்மேலும் படிக்க வைத்தது அந்த எழுத்து நடை. நாம் அறியாத உணவு பாரம்பரியத்தை நமக்கு அறிமுகப்படுத்தி தற்கால உணவுப் பழக்க வழக்கங்களில் வரவேண்டிய அவசியமான ஆரோக்கியமான மாற்றத்தை உணர்த்திய அருமையான தொடர். என்னைப் பொறுத்தவரை இந்த புத்தகம் அனைவரின் இல்லத்திலும் அவசியம் இருக்க வேண்டியப் புத்தகம்.
அதேபோல ஐயா நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்ற, மண் மீதும், மக்கள் மீதும் அக்கறை கொண்ட விவசாய பெருமக்களையும், அவர்களின் அளப்பரிய பணிகளையும் தொடர்ந்து தெரிந்து கொண்டது விகடன் வழியாக தான்.
விகடனின் திரைப்பட விமர்சனத்திற்கும் மதிப்பெண்ணிற்கும் எப்போதும் தனி மதிப்பு தான். நமக்கு பிடித்த இயக்குனரின்/நடிகரின் படம் வரப்போகிறது என்றால் விகடன் எவ்வளவு மார்க் கொடுக்கப் போறாங்களோ அப்படின்னு பேசிப்போம். நாம பார்த்து ரொம்ப பிடித்தது என்று நினைக்கிற படத்துக்கு விகடன் நல்ல மதிப்பெண் கொடுத்து இருந்தால் அது ஒரு தனி சந்தோஷம்.
திரைப்பட விமர்சனத்தில் நடிகர்களை மட்டுமல்லாமல் திரைக்குப் பின் பணியாற்றியவர்களின் பணியைப் பற்றியும் விமர்சனம் செய்து ரசிக்கச் செய்வது விகடன் தான். இந்த விமர்சனம் தான் தனித்தனியாக தொழில்நுட்ப கலைஞர்களை (கதை திரைக்கதை ஒளிப்பதிவு இசை பாட்டு நடனம் சண்டை) பற்றியும் அறிய வைத்து அந்தக் கோணத்திலும் சிந்திக்கத் தூண்டியது.
கர்நாடக சங்கீதம் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத, திரை இசைப் பாடல்களை மட்டும் ரசிக்க தெரிந்த என்னைப் போன்றவரையும், அது சம்பந்தமான கட்டுரைகளை ஆர்வம் குறையாமல் படிக்க வைக்க விகடனால் தான் முடியும். டிசம்பர் சீசனில் வரும் சங்கீத விழாக்கள் பற்றிய செய்திக்கட்டுரைகளும், ‘வியெஸ்வி’ போன்றோரின் விமர்சனங்களும், கர்நாடக சங்கீதத்தையும், ராகங்களின் பெயர்களையும் சிறிதளவேனும் அறிந்து கொள்ள உதவியது.
கால மாற்றத்திற்கு ஏற்ப கொண்டுவரப்படுகின்ற மாற்றங்களும் அழகுதான். அதில் அதிகம் ஈர்த்தது “வலைபாயுதே”. இப்போ எல்லாம் புத்தகம் வாங்கியவுடன் முதலில் படிக்கிறது வலைபாயுதே தான். ரசிக்கக்கூடிய கமெண்ட் எல்லாத்தையும் ரெண்டு மூணு பக்கத்துல கொடுக்கிறது செம்ம சூப்பர். நானும் எங்க அக்காவும் பலமுறை இதுல வர்ற கமெண்ட்களை பற்றி அலைபேசியிலேயே பேசி கண்ணில் நீர் வரும் அளவிற்கு சிரித்திருக்கிறோம். (‘இதை இன்னும் ரெண்டு பக்கத்துக்கு சேர்த்து போட்டா தான் என்ன’ அப்படின்னு தோணும்.)

காலம் சென்ற கலைஞர்கள், பிரபலங்கள் ஆகியோருக்கு விகடன் கொடுக்கும் அஞ்சலி மற்றும் விளையாட்டரங்கில் உலகப் போட்டிகள் குறித்த செய்திகள் மிகச் சிறப்பானதாகவே இருக்கும். நாம் பல இடங்களில் அதைப் பற்றிய செய்திகளை நிறைய படித்திருந்தாலும், விகடன் கட்டுரையில் நாம் படிக்காத, அறியாத, ஆச்சரியப்படுத்தும் செய்திகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். பல நேரங்களில் நமக்கு மிகவும் பிடித்த பிரபலங்கள் பற்றி விகடன் அஞ்சலி என்னவாக இருக்கும், இந்தியாவின் வெற்றி குறித்த கட்டுரை எப்படி இருக்கும் என்று காத்திருந்து படித்ததுண்டு.
விகடன் பரப்பிய பல்வேறு கிளைகளில், எனக்கு அதிக ஆனந்தத்தைக் கொடுத்தது “சுட்டி விகடன்”. ஒரு தரமான பத்திரிக்கை நிறுவனத்திலிருந்து, மாணவர்களுக்கான தனிப்புத்தகம் என்பதை மிகச் சிறந்த முன்னெடுப்பாகப் பார்க்கிறேன்.
புத்தகத் திருவிழாவிற்கு செல்லும் போதெல்லாம் விகடன் பிரசுரத்தைத் தேடிச் சென்று, அதில் எந்தெந்த தொடர்கள் எல்லாம் புத்தகங்களாக வெளிவந்திருக்கிறது என்று பார்ப்பதில் அலாதி ஆனந்தம். பரிசாக கொடுப்பதற்கு விகடன் பிரசுர புத்தகங்களை அதிகம் உபயோகித்திருக்கிறேன். “ஆறாம் திணை” புத்தக வடிவில் வெளிவந்த பின் என் நண்பர்களுக்கு இந்த புத்தகத்தைப் பரிசளித்திருக்கிறேன்.
இப்போதும், முன்பு வந்து கொண்டிருந்த அந்த சின்ன சைஸ் விகடன் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். அந்த சின்ன சைஸ் விகடனை ஒரு வாரமாவது மீண்டும் கண்ணில் பார்த்து, கையில் ஏந்தி விடமாட்டோமா என்ற பெரும் ஏக்கம் இருக்கிறது. வாய்ப்பிருக்கிறதா விகடன் தாத்தா அவர்களே?
விகடன் கொடுக்கும் அறிவிற்கும், அனுபவத்திற்கும், முக்கியமாக ஆனந்தத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!! மேன்மேலும் தொடர்ந்து வளரட்டும் உங்கள் பணி!! வாழ்க வளமுடன்!!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!