• September 25, 2025
  • NewsEditor
  • 0

ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக்கை, மத்திய பாஜக அரசு 2019-ல் அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, சட்டமன்றமில்லாத யூனியன் பிரதேசமாக மாற்றியது.

இதனால், லடாக்கின் நீண்டநாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து மற்றும் லடாக்கிற்கு அரசியலமைப்பின் பிரிவு 244-ன் கீழ் ஆறாவது அட்டவணையை நீட்டிக்கக் கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் செப்டம்பர் 10-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாகவே, லடாக் உச்ச அமைப்பின் இளைஞர் பிரிவு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

லடாக் போராட்ட வன்முறை

இந்த நிலையில், போராட்டம் நேற்று (செப்டம்பர் 24) லே நகரில் வன்முறையாக வெடிக்கவே இளைஞர் குழுவுக்கும் காவல்துறைக்கும் மோதல் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர்.

அதையடுத்து ஊரடங்கும் போடப்பட்டது. மறுபக்கம், சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தையும் முடித்துக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து, போராட்டம் வன்முறையாக மாறியது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிட்டது.

அந்த அறிக்கையில், “லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை நீட்டிப்பு கோரிக்கையை வலியுறுத்தி, செப்டம்பர் 10-ம் தேதி சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

இந்திய அரசு இதே விஷயத்தில் லே உச்ச அமைப்பு மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

அவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இத்தகைய பேச்சுவார்த்தையின் மூலம், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 45 சதவிகிதத்திலிருந்து 84 சதவிகிதமாக்கியது, கவுன்சில்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு, போதி மற்றும் புர்கியை அதிகாரப்பூர்வ மொழிகளாக அறிவித்தது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக்
Sonam Wangchuk – சோனம் வாங்சுக்

இதோடு 1,800 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பும் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசியல் ரீதியாகத் தூண்டப்பட்ட சில நபர்களுக்கு இதில் அதிருப்தி.

பேச்சுவார்த்தையை அவர்கள் நாசமாக்க முயற்சிக்கிறார்கள். உயர்மட்ட அதிகாரக் குழுவின் அடுத்த கூட்டம் அக்டோபர் 6-ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், செப்டம்பர் 25, 26 தேதிகளில் லடாக்கைச் சேர்ந்த தலைவர்களுடனான சந்திப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

சோனம் வாங்சுக்கின் கோரிக்கைகள் அனைத்தும், உயர்மட்ட அதிகாரக் குழுவில் நடந்த விவாதத்தின் ஒருபகுதிதான். பல தலைவர்கள் அவரிடம் உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தியும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

அரபு வசந்தம் போராட்டம், நேபாளத்தின் ஜென் Z போராட்டம் ஆகியவற்றை உதாரணமாகக் காட்டி மக்களைத் தவறாக வழிநடத்தினார்.

செப்டம்பர் 24-ம் தேதி காலை 11:30 மணியளவில் அவரின் ஆத்திரமூட்டும் தூண்டப்பட்ட ஒரு குழு உண்ணாவிரதப் போராட்டத்திலிருந்து வெளியேறி, ஒரு கட்சி அலுவலகம், லே-வில் அரசு அலுவலகத்தை தாக்கி தீ வைத்தது.

மேலும், அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கி போலீஸ் வாகனத்தை எரித்தனர். இதனால், தற்காப்புக்காகப் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் துரதிஷ்டவசமாகச் சிலர் உயிரிழந்தனர்.

மாலை 4 மணிக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில், சோனம் வாங்சுக் தனது ஆத்திரமூட்டும் உரைகள் மூலம் கும்பலைத் தூண்டிவிட்டார் என்பது தெளிவாகிறது.

இந்த வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு, நிலைமையைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்காமல் ஆம்புலன்ஸில் தனது கிராமத்திற்குச் சென்றார்.

போதுமான அரசியலமைப்பு பாதுகாப்புகளை வழங்குவதன் மூலம் லடாக் மக்களின் விருப்பத்திற்கு அரசு உறுதியளிக்கிறது.

பழைய மற்றும் ஆத்திரமூட்டும் வீடியோக்களை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் மக்கள் பரப்பக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *