
டெல்லி: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘The Ba***ds of Bollywood’ என்ற சீரிஸ் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, சீரிஸை தயாரித்த ரெட் சில்லீஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான ஷாருக்கான், கவுரி கான் மற்றும் அந்த சீரிஸை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே.
ஆர்யன் கான் சிக்கிய கதை: கடந்த 2021 அக்டோபர் 2-ம் தேதி, மும்பையில் இருந்து கோவாவுக்கு கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் ஒன்று சுற்றுலா புறப்பட்டது. இதில் என்சிபி அதிகாரிகளும் சாதாரண உடையில் பயணம் செய்தனர். கப்பலில் நடந்த கேளிக்கை விருந்தின்போது, போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் அடிப்படையில் மொத்தம் 21 பேர் கைதாகினர். இதனிடையே, ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்ற ரூ.25 கோடி லஞ்சம் வாங்கியதாக சமீர் வான்கடே மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.