• September 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ – கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் கல்விக்காக தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள பிரத்தியேக திட்டங்கள், சாதனைகள் பற்றிய கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்த்தினராகக் கலந்துகொண்டார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பல அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுடன் திரைக்கலைஞர்களும் கலந்துகொண்டனர்.

‘நான் முதல்வன்’!

தமிழக அரசின் திட்டங்கள் விளக்கப்பட்டதுடன், பயன்பெற்ற மாணவர்கள் நேரடியாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற மாணவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து வெளியில் படிக்கும் கல்வியை இலவசமாக பெற்றதாகக் கூறினர். உணர்வுப்பூர்வமாக தங்கள் பயணத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சந்துரு, “நான் முதல்வன் திட்டம் இந்தியாவிலேயே இல்லாத ஒரு திட்டம். இதை நேரில் பார்ப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த ஆண்டு தூத்துக்குடியில் 72 மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் சட்டக் கல்லூரியில் சேர்ந்திருக்கின்றனர். அதில் 52 பேர் மாணவிகள். நாங்கள் சட்டம் படிக்கும்போது வீட்டில் ஒருவர் சட்டத்துறையில் இருந்தால் தவிர சட்டம் படிக்க முடியாது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு நாங்கள் தினமும் பாடம் நடத்துகிறோம். வாட்ஸ்அப் மூலம் சொல்லித் தருகிறோம்” எனப் பேசினார்.

நீதிபதி சந்துரு

தொடர்ந்து பேசிய இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, “என்னை பேசக் கூப்பிட்ட போது நான் கூச்சப்பட்டேன். இங்கே பட்டிமன்ற பேச்சாளர்கள் முதல் சமூக சிந்தனையாளர்கள் வரை ஆறிவார்ந்தவர்கள் இருக்கின்றனர்.

ஆனால் இந்த மாணவர்கள் பேசுவதைக் கேட்டபோதுதான், நாமலும் ஒரு அரசுப்பள்ளியின் முன்னாள் மாணவர் தானே ஒரு நன்றியாவது சொல்லாவிட்டால் எப்படி எனத் தோன்றியது. பஸ் பாஸ் முதல் முதல் தலைமுறை பட்டதாரிக்கான ஸ்காலர்ஷிப் வரை அரசு கொடுத்த இலவசங்களை அனுபவித்து இஞ்னியரிங் படித்த மாணவன் நான். இந்த மேடையை தமிழக அரசுக்கு நன்றி சொல்ல பயன்படுத்திக்கொள்கிறேன்.

நான் ஒரு கிராமத்து மிடில் கிளாஸ் மாணவன். எங்க வீட்டில் இட்லி, கறி எல்லாம் ஞாயிற்றுக்கிழமை எடுக்க மாட்டார்கள், தீபாவளி பொங்கலுக்குத்தான் எடுப்பார்கள். என்னுடைய ஊர் அரங்கூரிலிருந்து திட்டக்குடி போய்தான் ஸ்கூல் படித்தேன். 7.30 – 8 மணிக்குள் பஸ் பிடிக்க வேண்டும். அப்போதெல்லாம் ‘மதியம் சோறு போடுற மாதிரி காலையிலையும் சோறு போட்டா நல்லா இருக்கும்னு’ யோசிச்சிருக்கேன். இப்போது அது நடந்து அதன் மூலம் 24 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். அந்த உணவிற்கு நன்றி சார்.

பெரிய பெரிய முதலாளிகளின் தேவையை பூர்த்தி செய்யும் அரசாங்கங்களுக்கு மத்தியில் பாமரமக்களின் குழந்தைகளுக்காக அரசு திட்டங்கள் கொண்டுவருகிறது. ‘படிக்கும் எண்ணம் மட்டும் இருந்தால் நான் படிக்க வைக்கேன்னு சொல்லுவாங்க, இப்போது படிப்பதற்கான எண்ணத்தையே நான் உருவாக்குகிறேன்’ என செயல்படுகிறது நம் அரசு.

சச்சின் டெண்டுல்கர் படித்தாரா? இளையராஜா படிச்சாரா? ரஹ்மான் படிச்சாரா என சொல்லுவதை நம்பாதீங்க. அப்படி ஜெயித்தவர்கள் 100 பேர்தான் படிச்சு ஜெயிச்சவங்கதான் மத்த எல்லாரும். படிங்க, படிங்க, படிங்க” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *