
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலகர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
இதில் அமைச்சர்களான தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், எம்.பி நவாஸ் கனி, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளான விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், பயனாளிகள் விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பட்டாசு ஆலை விபத்துக்களைத் தடுப்பதும் மற்றும் அதற்கான விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துவதும், தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாகவும் அதில் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அதனை விரைவுபடுத்தக் கூறியும் உத்தரவிட்டார்.
மகளிர் உதவித்தொகை, மகளிர் விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்தார்.
ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் கூறுகையில்,
“அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினோம். அதில் சாலைப் பணிகள், குடிநீர் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தோம். திட்டப் பணிகளைப் பொறுத்தவரை 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

மீதமுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை குறைகளைக் களைந்து காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளேன்.
விருதுநகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் உள் விளையாட்டு அரங்கங்களுக்கு முதற்கட்டப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. மேலும் அனைத்துத் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்ததில் திருப்திகரமாக உள்ளது” என்றார்.
ஆய்வுக் கூட்டத்திற்காக அனைத்துத் துறை அதிகாரிகளிடமும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுவதாக இருந்தது. இதனால் நேற்று நள்ளிரவு வரை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எல்லா அலுவலகங்களிலும் ஆய்வுப் பணிக்காக திட்டப் பணிகள் குறித்த கோப்புகளை அலுவலர்கள் சேகரித்துக் குறிப்பு எடுத்தனர்.
ஆனால் பூட்டிய அரங்கத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் 40 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதனால் மற்ற அதிகாரிகள் வேறு வழியின்றி மாவட்டச் செய்தித் தொடர்பு அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர்.
இதில் சில அதிகாரிகள், “தேர்வுக்காக இரவு முழுவதும் தயாரானோம். ஆனால் ஹால் டிக்கெட் வரவில்லை” என்று அங்கலாய்த்துக் கொண்டனர்.

கூட்டம் தொடங்கி 5 நிமிடத்தில் செய்தியாளர்கள், ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வெளியேறக் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
இதனை அடுத்து இரண்டாம் கட்ட அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் வெளியேறினர்.
இப்படி அதிகாரிகளையே அனுமதிக்காத இந்தக் கூட்டத்தில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் ஒப்பந்ததாரரும், விருதுநகர் நகரமன்ற உறுப்பினருமான ஆர்.பி. மதியழகன் மற்றும் நகர்மன்றத் தலைவர் மாதவன் ஆகியோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர். காவல்துறை அதிகாரிகள் மீண்டும் அவர்களை வெளியில் செல்ல அறிவுறுத்தியும் வெளியே செல்ல மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தி.மு.க-வின் சாதாரண பொறுப்புகளில் உள்ளவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமர்ந்திருந்தது அதிகாரிகளிடையே முகம் சுளிக்க வைத்தது.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் நெருங்கிய உறவினர்களாகவும் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் கே.கே.எஸ்.எஸ்.வி.டி. சுப்பாராஜ், கே.ஜி. ராஜகுரு, தி.மு.க நகரச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ். தனபாலன் ஆகியோர்களையே ஆய்வுக் கூட்டத்திற்குள் அனுமதிக்காத போது மதியழகன் மற்றும் மாதவனை அனுமதித்தது ஏன் என தி.மு.க கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.