
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகாவிற்குட்பட்ட அழகாபுரி கிராமத்தில் இருந்து மெட்டல்பட்டி செல்லும் சாலையின் இருபுறமும் தோட்டப் பாசன நிலங்களில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து மக்காச்சோளப் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வெடி வெடித்தும், சத்தம் எழுப்பியும் பன்றிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் இரவு நேரங்களில் காவல் பணியில் ஈடுபட்டு பன்றிகளை விரட்டி வந்தனர். கூட்டமாக வருவதால் காவல் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளையே சில நேரங்களில் தாக்கிவிடுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடமும், வனத்துறை அதிகாரிகளிடமும் கூறியும் பயனில்லை என்கிறார்கள் விவசாயிகள். இந்த நிலையில், கூட்டத்தில் சிக்கிய ஒரு காட்டுப்பன்றிக் குட்டியைப் பிடித்து கட்டி கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் ’உயர்வுக்குப்படி’ வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்திடம் காட்டுவதற்காக சாக்கில் கட்டி எடுத்து வந்தனர். சாகுப்பையை சோதனையிட்ட போலீஸார், பன்றிக்குட்டியைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, விவசாயிகளை ஆட்சியரை சந்திக்க அனுமதி மறுத்தனர்.
இதனால் விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அத்துடன் வேறு பணிகள் காரணமாக ஆட்சியர் விரைந்து சென்றதால் விவசாயிகளால் ஆட்சியரை சந்திக்க முடியவில்லை என்பதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். போலீஸாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிடிக்கப்பட்ட காட்டுப்பன்றிக் குட்டியை விவசாயிகளே வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

பின்னர் இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசினோம்,”கடந்த திங்கட்கிழமை நடந்த வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தோம். ஆனால், “அது காட்டுபன்றி இல்லை. வளர்ப்புப் பன்றி” என மரபணு சோதனையில் தெரிய வந்துள்ளது, இந்தப்பகுதியில் காட்டுப்பன்றிகள் கிடையாது எனவும், காட்டுப்பன்றி என்றால் ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும்” என வனத்துறையினர் கூறினர்.
இப்பகுதியில், வனத்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களிலும், விவசாயிகள் அவரவர் தோட்டங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களிலும் காட்டுப்பன்றிகளின் அட்டகாசங்கள் பதிவாகியுள்ளது. ஆதாரம் கேட்டதால், உயிரைப் பணயம் வைத்து கூட்டமாக வந்த காட்டுப்பன்றிகளில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு வந்தோம். ஆனால், போலீஸார் ஆட்சியரை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை. வளர்ப்புப் பன்றிக்கும் காட்டுப்பன்றிக்கும் நிறத்திலும், குணத்திலும் வித்தியாசம் உள்ளது.

வளர்ப்புப் பன்றிகள் பெரும்பாலும் யாரையும் தாக்காது சத்தம் கேட்டாலே ஓடி விடும். ஆனால், காட்டுப்பன்றி அப்படி அல்ல, விவசாயிகளைத் தாக்கி தன் கொம்பால் உடலில் காயத்தை ஏற்படுத்திவிடும். பெரிய காட்டுப்பன்றியின் தாக்குதல் கரடியின் தாக்குதலுக்கு இணையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. பயிர் காப்பீடும் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில், காட்டுப்பன்றிகளின் சேதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். காட்டுப்பன்றிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.