
நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு ‘பார்க்கிங்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 2023-ம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டிருந்தது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கைகளால் விருதினைப் பெற்ற எம்.எஸ். பாஸ்கர், சென்னை திரும்பியவுடன் நடிகர் திலகம் சிவாஜி இல்லத்திற்குச் சென்று தேசிய விருதினை சிவாஜி படம் முன் வைத்து வணங்கினார். இதையடுத்து தற்போது கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று வணங்கியிருக்கிறார்.
விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேசிய எம்.எஸ் பாஸ்கர், “சிவாஜி அப்பா, கலைஞர் கருணாநிதி அப்பா, கேப்டன் விஜயகாந்த் அண்ணன் மூவரும் சேர்ந்துதான் இந்தத் தேசிய விருதை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். தேசிய விருதை வாங்கும்போது அவர்கள் கொடுப்பதாக நினைத்துக் கொண்டுதான் வாங்கினேன்.
கேப்டன் விஜயகாந்த் அண்ணன் இருந்திருந்தால் இதைக் கொண்டாடித் தீர்த்திருப்பார் என்று பிரேமலதா அண்ணியார் சொல்லி என்னை வாழ்த்தினார். மூவரின் ஆன்மாவும் என்னை ஆசிர்வதிக்கும்” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.