
பீலா வெங்கடேசன்
தமிழக அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் நேற்று 56-வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
கொரோனா காலத்தில் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்த பீலா வெங்கடேசன் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலினின் இரங்கலில் கூட `கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர்’ என அவரின் பணியை மெச்சியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இவர் குறித்த தகவல்கள் தேடப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் வாழையாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பீலா வெங்கடேசன்.
2006-ம் ஆண்டு சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசனுக்கும் – காவல்துறை டிஐஜியாக ஓய்வுபெற்ற எஸ்.என் வெங்கடேசனுக்கும் மகளாகப் பிறந்தார்.
தூத்துக்குடி பூர்வீகம் என்றாலும் வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்த பீலா வெங்கடேசன், 1992-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாரான பீலா வெங்கடேசன், 1997-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்றார்.
தொடர்ந்து பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பொறுப்பு வழங்கப்பட்டு குடிமைப் பணிகளை மேற்கொண்டார்.
தொடர்ந்து இந்திய ஹோமியோபதி மருத்துவம், மத்திய ஜவுளித்துறை போன்ற துறைகளிலும் பணியாற்றினார்.
இதற்கிடையில், கணவர் ராஜேஸ் தாஸுக்கு தமிழ்நாட்டுக்கு பணி மாறுதல் கிடைத்தது. அதனால் தமிழக அரசு நிர்வாகத்தில் பொறுப்பு கோரினார்.
அதன் அடிப்படையில், செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத் துறை இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார் பீலா வெங்கடேசன்.

இந்த நிலையில்தான் 2019-ம் ஆண்டு தமிழ்நாட்டின் சுகாதாரத்துறையில் இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டார்.
அந்தச் சூழலில், பீலா வெங்கடேசனுக்கு தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராகப் பதவி வழங்கப்பட்டது. அது கொரோனா காலம் என்பதால், பம்பரமாகச் சுற்றிச் சுழன்று பணியாற்றினார்.
அடிக்கடி தொலைக்காட்சிகளில் பேட்டி, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் தகவல் தெரிவிப்பது என அவரின் தீவிர உழைப்பால் தமிழ்நாட்டு மக்களின் மனதில் இடம்பிடித்தார்.
கொரோனா தொற்றுக்குப் பிறகு எரிசக்தித் துறையின் செயலாளராகப் பணியாற்றி வந்த பீலா தன் கணவர் ராஜேஷை விவாகரத்து செய்து, பீலா ராஜேஷ் என்பதை பீலா வெங்கடேசன் எனத் தன் தந்தையின் பெயரை இணைத்து மாற்றிக்கொண்டார்.
இச்சூழலில் தான் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.