• September 25, 2025
  • NewsEditor
  • 0

சங்கங்களில் எல்லாம் இது கலக காலம் போல. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு எதிராக நடிகர் நம்பிராஜன் தொடுத்த வழக்கில் இந்த வாரத்தில் தீர்ப்பு வரலாமென்கிறார்கள்.

மறுபுறம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சீனியர் தயாரிப்பாளரான ராஜேஸ்வரி வேந்தனை சங்கத்திலிருந்து தற்காலிக நிக்கம் செய்து உத்தரவிட, அவரும் நீதிமன்றம் சென்றுள்ளார். அந்த வழக்கிலும் நாளை தீர்ப்பு வரவிருக்கிறது.

ராஜேஸ்வரி வேந்தன் ‘தாய்மண் திரையகம்’ என்கிற பேனரில் ‘மயங்கினேன் தயங்கினேன்’, ‘ஜின்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர். என்ன காரணத்துக்காக தயாரிப்பாளர் சங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என அறிய அவரையே தொடர்பு கொண்டு பேசினோம்.

தயாரிப்பாளர் ராஜேஸ்வரி

”நான் இந்தச் சங்கத்துல சீனியர் உறுப்பினர். கடந்த 2018ம் வருஷத்துல இருந்து சங்கத்துல பொதுக்குழு கூட்டப்படலை. இது தொடர்பா பல முறை நிர்வாகிகள்கிட்ட வற்புறுத்தியும் யாரும் கண்டுக்கலை. அதனால சங்கப் பதிவாளர அலுவலகத்துல புகார் செஞ்சேன்.

அங்க இருந்து சங்க நிர்வாகிகள் கிட்ட விளக்கம் கேட்டிருப்பாங்க போல. உடனே, சங்க விதிகளை மீறிட்டீங்க, உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாதுன்னு கேட்டு எனக்கு நோட்டிஸ் அனுப்புனாங்க. இந்தக் கேள்வியே அர்த்தமில்லாததுனு என் பதிலை அனுப்பினேன்.

‘பதில் திருப்தி இல்லைனு முதல்ல மூணு மாசம் சஸ்பென்ட்’னு சொல்லி ஒரு நோட்டிஸ் அனுப்பினாங்க. அதாவது சங்க ‘பை லா’வுலயே அதிகபட்சம் 45 நாள்தான் சஸ்பென்ட் நடவடிக்கை எடுக்க முடியும்னு இருக்கு.

அது கூடத் தெரியாம மூணு மாசம் சஸ்பென்ட்னு சொன்னாங்க. ‘பை லா’வையே ஒழுங்கா படிக்காம நிர்வாகம் நடத்தறவங்களை என்ன சொல்றது? அதனாலதான் நீதிமன்றம் போனேன்.

பதிவுத்துறையின் கடிதம்
பதிவுத்துறையின் கடிதம்

இதுக்கிடையில் முந்தா நாள் இன்னொரு நோட்டிஸ். அதுல மூணு மாசத்தை ஒன்றரை மாசமா குறைச்சிருக்காங்க. ஏன் இப்படிக் குளறுபடி பண்ணிட்டிருக்காங்க தெரியலை. சரியா நிர்வாகம் பண்ணி முறையா பொதுக்குழு கூட்டினா யார் கேக்கப் போறாங்க?

சங்கத்துல உறுப்பினரா இருக்கிறவங்க நியாயமான கேள்வி கேட்டாக் கூட இந்த மாதிரி மிரட்டறதெல்லாம் என்ன வகையான நிர்வாகம் தெரியலை” என்கிறார் ராஜேஸ்வரி. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வருமென கூறப்படுகிறது.

ராஜேஸ்வரியின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சங்கத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். “சங்க விதிமுறையை மீறி யார் நடந்துகிட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம்தான். அவங்க வழக்கு போட்டிருப்பதாகக் கேள்விப்பட்டோம். தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம்” என முடித்துக் கொண்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *