• September 25, 2025
  • NewsEditor
  • 0

ஜனநாயக மாதர் சங்க மாநாடு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-வது மாநில மாநாடு கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடைபெற்றது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில்,

“திருவள்ளுவர், மகாகவி சுப்பிரமணிய பாரதி, நாராயண குரு, இராமலிங்க அடிகளார், பெரியார் போன்றவர்களுடைய முயற்சி மறக்க முடியாதது.

இவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டவர்கள். பெண்களுக்கு கோயில் பக்கம் நடக்க முடியாது. கோயிலுக்குள் சென்று வணங்க முடியாத நிலைமை மாறி, அதற்கான முழு அனுமதியைப் பெற்றுத் தந்தவர்கள் அன்றைய தலைவர்கள்.

தமிழகத்தில் தோள்சீலைப் போராட்டம் மிக முக்கியமானதாகும். நீண்ட பல சரித்திரப் போராட்டங்கள் தமிழகத்திலும் கேரளாவிலும் நடைபெற்றுள்ளன. அதன்பிறகு இந்தப் போராட்டங்களை இடதுசாரி கட்சிகள் முன்நின்று நடத்தி வருகின்றன.

மாநாடில் கலந்துகொண்டவர்கள்

பெண்கள், குழந்தைகள் நரபலிக்கு எதிராக ஜனநாயக மாதர் சங்கம் போராடி வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் இப்பொழுது பெண்களுக்கு எதிராக உள்ளவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்.

நாடு இக்கட்டான சூழ்நிலையைக் கடந்து கொண்டிருக்கிறது. 2014-ம் ஆண்டு பா.ஜ.க அரசு அதிகாரத்தில் வரும்போது பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் எதுவுமே செய்யவில்லை.

பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படவில்லை. அதே சமயம் பெண்களுக்கு எதிரான குற்றம் செய்தவர்களை மாலை போட்டு வரவேற்றார்கள்.

உத்தர் பிரதேஷ் மாநிலத்தில் தான் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. கற்பழிக்கப்பட்ட பட்டியலின குழந்தையை போலீசார் பெட்ரோல் ஊற்றி கொலை செய்தனர்.

மத்திய அரசும் சங் பரிவாரும் இதைப் பார்த்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முயற்சி செய்யவில்லை. பெண்கள் பாதுகாப்பிற்கு மத்திய அரசு எந்த சட்டமும் கொண்டு வரவில்லை.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு

மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் நிதி ஒதுக்கி உள்ளார்கள்.

கேரளாவில் இடதுசாரி அரசு குழந்தைகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. கேரளாவில் பெண்களுக்காக குடும்பஸ்ரீ திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம்.

அதிகமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளோம். பெண்களுக்காக தொழில் பயிற்சி சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறோம். உள்ளாட்சியில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்த இந்தியாவின் முதல் மாநிலம் கேரளா ஆகும்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு

இஸ்ரேல் தாக்குதல்

2023 முதல் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியது. அதில் 65,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர். 252 பத்திரிகையாளர்கள் பாலஸ்தீனத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ட்ரம்ப் நடவடிக்கை

அமெரிக்காவில் ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு விசா கட்டணம் 22 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியப் பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதில் நமது நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிராக மத்திய அரசு எதுவும் பேசவில்லை.

நமது நாட்டிற்கு மகத்துவமும் பாரம்பரியமும் உண்டு. போராட்டங்கள் மூலம்தான் வெற்றி பெற்றுள்ளோம். எனவே போராடுவதற்குத் தயாராக வேண்டும்.

மாநாட்டில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன்

கன்னியாஸ்திரிகள் கைது

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டனர். அதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோட்சே, சவார்க்கர்

சுதந்திரப் போராட்டத் தலைவர் காந்திஜியை மாற்றிவிட்டு கோட்சேவையும், சவார்க்கரையும் கொண்டு வர மத்திய அரசு திட்டம் போட்டுள்ளது.

கவர்னர் மூலம் நெருக்கடி

தமிழ்நாடு, கேரளா உட்பட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கவர்னர் மூலம் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு

ஜி.எஸ்.டி-யில் மாற்றம் கொண்டுவர கவுன்சில் உள்ளது. ஆனால் கவுன்சிலைக் கூட்டாமலே பிரதமர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தற்போதைய வரி குறைவால் பொதுமக்களுக்கு எந்த லாபமும் கிடையாது.

இந்த வரி குறைப்பால் ஒரு மூடை சிமெண்ட் ரூபாய் 30 குறைய வேண்டும். ஆனால் சிமெண்ட் கம்பெனிகள் ரூபாய் 35 விலை ஏற்றி உள்ளனர்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கேரள மாநிலத்திற்கு ரூபாய் 8000 கோடி முதல் 10,000 கோடி வருவாய் குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *