
மதுரை: குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களைத் தடுக்க வட்டாட்சியர் தலைமையில் தனி குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவில் பக்தர்கள் காளி, சிவன், முருகன் இதிகாச கதாபாத்திரங்கள், குரங்கு, புலி, வேடன் காவலர், ஆண்கள், பெண்கள் போன்று தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேடமிடுவர்.
பின்னர் 48 நாட்கள் வரை விரதம் இருந்து பக்தர்களிடம் காணிக்கை பெற்று தசரா இறுதி நாளில் முத்தாரம்மன் கோயிலுக்குச் சென்று காணிக்கையைச் செலுத்துவர். கடந்த 20 ஆண்டுகளாக அதிக காணிக்கை வசூலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திரைப்படம், சின்னத்திரை நடிகர், நடிகைகளை அழைத்து வந்து அவர்களை தசரா குழுவுடன் ஆபாசமான, இரட்டை அர்த்த திரைப்படப் பாடல்களுக்கு அரை குறை ஆடைகளுடன் பொதுவெளியில் நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.