
தினம் தினம் தங்கம் விலை தாறுமாறாக எகிறி வருகிறது.
இன்னொரு பக்கம், இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகைகள், முகூர்த்த தினங்கள் வர உள்ளன.
‘இப்போது என்ன செய்வது?’ என்று மக்கள் குழம்பி போய் இருக்கிறார்கள். நடுத்தர மக்களால் தங்கம் வாங்கவும் முடியவில்லை, வாங்காமல் இருக்கவும் இருக்க முடியவில்லை. காரணம், இந்தியர்களுக்கும், தங்கத்திற்கும் அப்படியொரு பிணைப்பு.
இந்த நிலையில், மக்கள் தங்கம் வாங்குவதாக இருந்தால் எப்படி வாங்கலாம், எது லாபம் என்பதை விளக்குகிறார் நிதி நிபுணர் சுந்தரி ஜகதீசன்.
தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நேரத்தில், ஆபரணத் தங்கத்தின் தேவை இருந்தால் மட்டும், அதை வாங்குவது நல்லது. இல்லையென்றால், தங்க முதலீடு ஆப்ஷனுக்குச் சென்றுவிடலாம்.
சிலருக்குத் தங்கத்தைத் தவிர, பிற உலோகங்கள் பயன்படுத்தினால் அலர்ஜி வரும். அவர்கள் 9 கேரட் தங்கம் வாங்கிப் பயன்படுத்தலாம். இப்போது இந்தத் தங்கத்தை மத்திய அரசாங்கமும் அங்கீகரித்துவிட்டது. அதனால், இதைத் தாராளமாக வாங்கலாம். ஒப்பீட்டளவில் விலையும் குறைவு.
தேவையான அளவு ஆபரணம் உண்டு. ஆனால், எதிர்காலத்தில் தங்க ஆபரணம் வேண்டும் என்பவர்கள், இப்போதே ஆபரணத் தங்கத்தை வாங்கிவிட வேண்டாம்.
இப்போது இருக்கும் மாடல், எதிர்காலத்தில் பழைய மாடல் ஆகியிருக்கும். அதை விற்று, வேறு ஆபரணத்தை வாங்கினாலும் அவ்வளவு லாபகரமானதாக இருக்காது.
அதனால், எதிர்காலத் தங்கத் தேவைக்கு முதலீடுதான் சிறந்தது. நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்து வருகிறீர்களோ, அது தங்கம் விலை உயர்விற்கு ஏற்ப அப்படியே உயர்ந்துவிடும். சேதாரம், செய்கூலி என எதுவும் இருக்காது. நமக்கு லாபம்தான்.

இனி அந்தத் தங்கம் முதலீடு ஆப்ஷன்களுக்கு வருவோம்.
1. கோல்டு இ.டி.எஃப்: தங்கம் வாங்குவதற்காக நீங்கள் வைத்திருக்கும் பணத்தை கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்யலாம். நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கான தங்கம் உங்களது கணக்கில் யூனிட்டுகளாக சேர்ந்துவிடும்.
இதற்கு டீமேட் கணக்கு அவசியம். இதை தொடங்குவது எளிது தான்.
இதில் தினம் தினம் கூட நீங்கள் முதலீடு செய்யலாம். செலவு, சேமிப்பு போக மிச்சம் இருக்கும் பணம் ரூ.100 ஆக இருந்தால் கூட, இதில் முதலீடு செய்யலாம். அந்தத் தொகைக்கான யூனிட்டுகள் உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும்.
இதனால், பல்க்கான தொகையைச் சேர்த்து தான் தங்கம் வாங்க வேண்டும் என்கிற எதிர்கால டென்ஷனை இந்த முதலீடு உங்களுக்கு குறைக்கும்.
மேலும், தங்க முதலீட்டிலேயே இது தான் பெஸ்ட் ஆப்ஷன்.
2. மல்டி அசட் ஃபண்ட்: இது மியூச்சுவல் ஃபண்டின் ஒரு வகை ஃபண்ட் ஆகும். இதில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தங்கத்தில் முதலீடு செய்யப்படும்.

3. எஸ்.ஐ.பி: தங்கத்தை இலக்காக வைத்து மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டிலோ, பங்குச்சந்தையிலோ முதலீடு செய்து வரலாம். இது உங்களுக்கு எதிர்காலத்தில் பெரிதும் கைக்கொடுக்கும்.
4. கூகுள் பே: மேலே கூறியுள்ள முதலீடுகள் தெரியாது என்பவர்கள், உங்கள் மொபைல் போனில் இருக்கும் கூகுள் பே மூலமே தங்கம் வாங்கலாம். ‘Search’-ல் சென்று ‘Gold Locker’ என்று தேடி பாருங்கள். அந்த Gold Locker-ல் ரூ.10 முதலே தங்கம் வாங்கலாம். வாங்கிய தங்கத்தை விற்கவும் செய்யலாம். ஹேக்கிங் போன்ற பிரச்னைகள் இருப்பதால், ரிஸ்க் சற்று அதிகம். அதனால், இதில் முதலீடு செய்யும்போது, கவனமாக இருங்கள்.