
சென்னை: நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, நடிகை சாய்பல்லவி, இசையமைப்பாளர் அனிருத் உட்பட 90 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பாரதியார் விருது ந.முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது கே.ஜே. ஜேசுதாஸுக்கும், பால சரஸ்வதி விருது முத்துகண்ணம்மாளுக்கும் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல, பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், சிறந்த கலை நிறுவனத்துக்கு கேடயமும், சிறந்த நாடகக் குழுவுக்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.