
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் சேர்ந்த சுக்ராம் என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வளர்ப்பு பிராணிகள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர்கள். திருமணத்திற்கு முன்பு இந்த வளர்ப்பு பிராணிகள் குறித்து இருவரும் பகிர்ந்து கொண்டதால்தான் அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரித்து திருமணத்திற்கு வித்திட்டது.
ஆனால் அந்த வளர்ப்பு பிராணிகளே இப்போது அவர்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டது. சுக்ராம் ஏற்கனவே தனது வீட்டில் நாய், முயல் மற்றும் மீன் தொட்டி வைத்திருக்கிறார். அவரது மனைவி திருமணமாகி சுக்ராம் வீட்டிற்கு வரும் போது தன்னுடன், தான் ஆசையாக வளர்த்த பூனையை அழைத்து வந்தார்.
ஆரம்பத்தில் அவர்களுக்குள் எந்த வித பிரச்னையும் இல்லாமல்தான் இருந்தது. அவர்கள் சண்டை போட்டுக்கொள்ளாவிட்டாலும் அவர்களின் வளர்ப்பு பிராணிகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக்கொண்டன.
அடிக்கடி பூனை மீன் தொட்டிக்கு அருகில் நின்று அதிலிருந்த மீனை எடுத்துச் சாப்பிட்டுவிட்டது. நாய், பூனையோடு சண்டையிட்டுக்கொண்டது. நாய் எப்போதும் பூனையைப் பார்த்துக் குரைத்துக்கொண்டே இருந்தது. இதனால் பூனைப் பயந்து அடிக்கடி சாப்பிடாமல் இருந்தது.
இது சுக்ராம் மனைவிக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் கணவன், மனைவி இடையே மோதல் ஏற்பட்டது. அடிக்கடி ஏற்பட்ட மோதல் அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது.
இதனால் இருவரது குடும்பத்தினரும் அவர்களுக்குள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதையடுத்து இப்பிரச்னை குடும்ப நீதிமன்றத்திற்குச் சென்றது.
இருவரும் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து சுக்ராம் கூறுகையில், ”திருமணத்திற்கு முன்பு வளர்ப்பு பிராணியைக் கொண்டு வரக்கூடாது என்று சொல்லி இருந்தேன். அப்படி இருந்தும் நான் சொன்னதைக் கேட்காமல் பூனையை அவரது வீட்டிலிருந்து எடுத்து வந்தார். பூனை அடிக்கடி மீன் தொட்டியில் ஏறி நிற்கிறது” என்று தெரிவித்தார்.